×

உணவு, குடிநீர் இல்லாமல் ஈரான் நாட்டில் தவிக்கும் 27 மீனவர்களை மீட்க வேண்டும் கலெக்டரிடம் உறவினர்கள் மனு

நாகை,மார்ச்20: ஈரான் நாட்டில் உணவு, குடிநீர் இன்றி சிக்கி தவிக்கும் நாகை மாவட்டம் 7 கிராமங்களை சேர்ந்த 27 மீனவர்களை மீட்டுத்தர கோரி கலெக்டர் அலுவலகத்தில் உறவினர்கள் கண்ணீருடன் மனு கொடுத்தனர். நாகை மாவட்டம் நாகூர், கீச்சாங்குப்பம், விழுந்தமாவடி, தரங்கம்பாடி, சின்னங்குடி, கீழமூவர்க்கரை, பெருமாள்பேட்டை ஆகிய 7 கிராமங்களில் இருந்து 100க்கும் மேற்பட்டவர்கள் தேசிய மீனவர் பேரவை துணை தலைவர் குமரவேலு, திமுக மாவட்ட துணை செயலாளர் மனோகரன் ஆகியோர் தலைமையில் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் வயிற்றில் அடித்து கொண்டு கண்ணீருடன் கதறி அழுது கொண்டு மனு கொடுத்தனர். இதில் நாகூரில் இருந்து ராமு, சிவக்குமார், அஜய், விஜய், வைத்திலிங்கம், ராமு, குணசேகரன், கீழமூவர்க்கரையில் இருந்து தேவேந்திரன், அஞ்சப்பன், பெருமாள்பேட்டையில் இருந்து பாக்கியராஜ், சத்தியரசன், விஷ்ணு, சின்னங்குடியில் இருந்து தண்டபாணி, முனுசாமி, மணிகண்டன், தரங்கம்பாடியில் இருந்து ராமு, சின்னதுரை, விழுந்தமாவடியில் இருந்து மணிமாறன், செம்பரியப்பன், சுதன், பாரதிதாசன், அன்பரசன், பிரவீன்குமார், கார்திக், ஆதித்யகரிகாலன், கீச்சாங்குப்பத்தில் இருந்து முத்துலிங்கம், வெற்றிச்செல்வம் ஆகிய 27 பேர் பல்வேறு காலகட்டங்களில் நாகை மாவட்டத்தில் இருந்து ஈரான்நாட்டிற்கு அரேபிய முதலாளிகளிடம் ஒப்பந்த அடிப்படையில் மீன் பிடிக்க சென்றனர். தற்சமயம் அந்த நாட்டில் கொரோனா வைரஸ் பரவிக் கொண்டு இருக்கிறது.
இதனால் அந்த நாட்டில் சாப்பிடுவதற்கு உணவு, குடிநீர் கிடைக்காமல் உள்ளது. இந்நிலையில் நாகை மாவட்டத்தில் இருந்து சென்ற 27 மீனவர்களுக்கும் அதே நிலை ஏற்பட்டுள்ளது. தங்குவதற்கு இடம் இன்றி விசை படகுகளில் தங்கி உள்ளனர். குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் கடல் நீரை சூடுபடுத்தி குடித்து வருகின்றனர். உணவு இன்றி தவிர்த்து வருகின்றனர். வறுமையின் காரணமாக குடும்பத்தை காப்பாற்ற நினைத்து ஈரான் நாட்டிற்கு சென்றவர்களின் நிலை மிகவும் மேசமாக உள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு உடனே அவர்களை மீட்டுத்தர வேண்டும்.

ஈரான் நாட்டில் சிக்கி தவிக்கும் எங்கள் உறவினர்களை மீட்டு தரக்கோரி கடந்த 2 மாத காலமாக முதல்வரின் தனிப்பிரிவு, தலைமை செயலகம், மீன்வளத்துறை அலுவலகம், கலெக்டர் அலுவலகம் என்று மனு கொடுத்து கொண்டே இருக்கிறோம். ஆனால் அங்கு சிக்கிதவிக்கும் மீனவர்களை மீட்க அரசு எவ்வித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் அரசு தலையிட்டு எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களை மீட்டு தர வேண்டும். அதற்கு நாகை கலெக்டர் பரிந்துரை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Relatives ,collector ,fishermen ,Iran ,
× RELATED திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக...