×

கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற திருக்கடையூர் கோயிலில் உயிர்காக்கும் யாகம் தருமபுரம் மடாதிபதி முன்னிலையில் நடந்தது

தரங்கம்பாடி, மார்ச் 20: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் கொரோனாவின் கோர தாண்டவத்தில் இருந்து மக்களை காப்பாற்ற உயிர்காக்கும் யாகம் தருமபுரம் மடாதிபதி முன்னிலையில் நடந்தது. கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் எங்கும் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனாவின் இந்த கோர தாண்டவத்தில் இருந்து மக்களை மீட்கவும், மக்களின் மரண பயத்தை போக்கவும், நீண்ட ஆயுள் பெறவும் உயிர்காக்கும் யாகம் திருக்கடையூர் அமிரதகடேஸ்வரர் கோயிலில், அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சங்கத்தின் தரங்கம்பாடி வட்டகலை சார்பில் நடைபெற்றது. தருமபுரம் மடாதிபதி 27வது குரு மகா சன்னிதானம் முன்னிலை வகித்தார். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் 120 சிவச்சாரியார்கள் கலந்து கொண்டு யாகம் வளர்த்தனர்.

128 வகையான திரவிய பொருட்கள் புனித நீரில் கலக்கப்பட்டு பஞ்ச்சாட்சரம் மந்திரம், பதம் மந்திரம் ஆகிய மந்திரங்கள் ஓதப்பட்டு யாகம் வளா்க்கப்பட்டது. அதன் பின் அந்த புனிதநீர் ஊர்வலமாக கோயில் பிரகாரத்தை வலம் வந்து அமிர்தகடேஸ்வரர் மற்றும் அபிராமி அம்மனுக்கு அந்த புனிதநீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சங்கத்தின் மாநில தலைவர் கீர்த்திவாச குருக்கள், கொள்கை பரப்பு செயலாளர் உமாகாந்த சிவம், மாவட்ட தலைவர் கணேச சிவாச்சாரியார், தரங்கம்பாடி வட்டதலைவர் பட்டுசிவாச்சாரியார் உள்பட ஏராளமான சிவாச்சாரியர்களும், பக்தர்களும் கலந்து கொண்டனர்.

Tags : sacrifice ,Abbot of Dharmapuram ,Thirukkadoor Temple ,
× RELATED அகத்தீஸ்வரர் கோயிலில் 64 பைரவர்கள்...