×

இந்து மக்கள் கட்சி வேண்டுகோள் கொரோனாவை காரணம் காட்டி தமிழகத்தில் கோயில் பூஜைகளை தடுக்க கூடாது

சீர்காழி, மார்ச் 20: கொரோனாவை காரணம் காட்டி தமிழகத்தில் கோயில் பூஜைகளை தடுக்க கூடாது என்று இந்து மக்கள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் சுவாமிநாதன் ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது: தஞ்சை பெரியகோயில், தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில்களை மூட உத்தரவிட்டது, ஈரோடு பண்ணாரி அம்மன் கோயில் பூக்குழி தள்ளி வைப்பு, கும்பகோணத்தை அடுத்துள்ள வலங்கைமானில் பல ஆண்டுகளாக விமரிசையாக நடைபெற்று வரும் பாடை கட்டி மாரியம்மன் கோயில் திருவிழா தள்ளி வைக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் பெரிய மாரியம்மன் கோயில் திருவிழா பக்தர்கள் காப்பு கட்டி விரதமிருந்து நடைபெற்று வந்த நிலையில் தீ மிதிக்க தடை விதிக்கப்பட்டிருப்பது என தமிழகம் முழுவதும் பல்வேறு கோயில்களில் காவல்துறையும், வருவாய் துறையினரும் திருவிழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளை நடத்த தடை விதிக்கிறார்கள். இந்த நிலைபாடு இந்துக்களின் வழிபாட்டு உரிமையை பறிப்பதாகும்.

நோய் பரவும் காலங்களில் அனைத்து மருத்துவமனைகளும் திறந்திருக்க வேண்டியது எவ்வளது அவசியமோ அது போல அனைத்து ஆலயங்களும் திறந்திருக்க வேண்டும். கோயில்களில் பூஜைகளை தடைப்படும் படி மூடி வைப்பது தவறு. மாசி மாதம் முதல் வைகாசி மாதம் வரையில் அனைத்து இந்து கோயில்களிலும் பிரம்மோற்சவங்கள், வருடாந்திர உற்சவங்கள், கிராம தேவதைகளுக்கு தீமிதி முதலிய திருவிழாக்களும் நடக்கும். இவைகள் இந்த கோடை காலத்தில் வழக்கம் போல நடைபெற வேண்டும். கோயில் திருவிழாக்களை நிறுத்துவது, கோயில்களை மூடுவது எல்லாம் தவறான முன்னுதாரணம். பக்தர்கள் கோயில்களுக்கு தூய்மையாக சென்று அரசு கூறும் வழிகளை பின்பற்றி வழிபாடுகளை மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும். இது போன்ற வழிபாடுகள் மூலமாகவே “கொரோனோ” முதலியவைகளில் இருந்து தப்பிக்கவும் முடியும்.

Tags : temple worship ,People's Party ,Tamil Nadu ,
× RELATED இந்து பெண்கள் குறித்து அவதூறு கருத்து...