×

கொரோனா வைரஸ் எதிரொலி அரிமளம் கோயில் பங்குனி திருவிழா ஒத்திவைப்பு

திருமயம், மார்ச் 20: கொரோனா வைரஸ் எதிரொலியாக அரிமளம் கோயில் பங்குனி திருவிழா தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், அரிமளம் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில்களில் வழக்கமாக மாசி, பங்குனி மாதம் பூச்சொரிதல் விழா நடத்தி காப்பு கட்டுதலுடன் 10 நாள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் ஒவ்வொரு நாள் நடைபெறும் மண்டகப்படி திருவிழாவின் போதும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுவது காவடி, அலகு காவடி, பால்குடம் எடுத்து அம்மனுக்கு நேர்த்திகடன் செலுத்துவதை அப்பகுதி பக்கதர்கள் காலம் காலமாக பின்பற்றி வருகின்றனர். அப்போது திருவிழாவில் கலந்து கொள்ள உள்ளூர் மட்டுமல்லாது வெளியூர், வெளிநாட்டில் தங்கி வேலை செய்யும் நபர்களும் திருவிழாவை கண்டுகளிக்க சொந்த ஊருக்கு வருகின்றனர். இதனால் திருவிழா நடைபெறும் திருமயம், அரிமளம்,பெருங்குடி, ஓணாங்குடி, மிரட்டுநிலை, கடியாபட்டி, விராச்சிலை, நமணசமுத்திரம் உள்ளிட்ட திருமயம் தாலுகாவின் பெரும்பாலான கிராமங்கள் விழா கோலம் பூண்டிருக்கும்.

இது வருடம் தோறும் நடைபெறும் திருவிழா என்பதால் இதனை கொண்டாட அப்பகுதி மக்கள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஆயத்தமாகி வருகின்றனர். இதனிடையே பெருங்குடி, ஓணாங்குடி, திருமயம் இளஞ்சாவூர் அம்மன் கோயில்களில் ஏற்கனவே பூச்சொரிதல் விழா நடைபெற்று விழாக்கள் நடைபெறும் நிலையில் அரிமளம் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வரும் 27ம் தேதி தொடங்க இருந்தது.

இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக மக்கள் அச்சமடைந்து வரும் நிலையில் தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்ததோடு மக்கள் அதிகம் கூடுவதாக கருதப்படும் மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு வரும் 31ம் தேதி வரை தடைவிதித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதனை கருத்தில் கொண்ட அரிமளம் முத்துமாரியம்மன் கோயில் விழா கமிட்டியினர் நடப்பு ஆண்டு நடக்கவிருக்கும் திருவிழாவை மார்ச் 31ம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் நிலவும் நிலைமையை பொறுத்து விழா நடைபெறும் தேதி அறிவிப்பது என முடிவு செய்யப்பட்டது.

பெரும்பாலும் பூச்சொரிதல் விழா நடத்தப்பட்ட பின்னர் விழாவை தமிழக அரசு நிறுத்தும் பட்சத்தில் பக்தர்களுக்கு மன வருத்தத்தை கொடுக்கலாம். இதற்காக இது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததற்கு பல்வேறு தரப்பினரும் அரிமளம் முத்துமாரியம்மன் கோயில் விழா கமிட்டியினருக்கு பாராட்டு தெரிவித்தனர். விழாவில் இறைச்சி வாங்க பொதுமக்கள் அச்சம்: அரிமளம், திருமயம் பகுதியில் நடைபெறும் திருவிழாவில் முதல் திருவிழாவான பூச்சொரிதல் விழாவை தொடர்ந்து சுமார் 16 நாட்களுக்கு பெரும்பாலான வீடுகளில் அசைவம் சமைப்பதை தவிர்த்து அம்மனுக்கு விரதம் இருப்பது வழக்கம். இந்நிலையில் விரதம் முடிந்த பின்னர் விழாவின் கடைசி நாளில் கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து, ஆடு, கோழி பலியிட்டு பக்தர்கள் விரதத்தை முடித்து கொள்கின்றனர். அப்போது வீட்டிற்கு உறவினர்களை அழைத்து விதவிதமாக அசைவம் சமைத்து விருந்து அளித்து உபசரிப்பர்.

தற்போது கொரோனா வைரஸ் பரவுதல் எச்சரிக்கையால் கடந்த சில நாட்களாக இறைச்சி விற்பனை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில் அரிமளம், திருமயம் பகுதியில் விழாவை முன்னிட்டு நடைபெறும் இறைச்சி விருந்தில் உறவினர்கள் கலந்து கொள்ள அச்சம் தெரிவிப்பதோடு இறைச்சி வாங்க பொதுமக்களும் அஞ்சுகின்றனர். இந்நிலையில் இனி வரும் வாரங்களில் அரிமளம், திருமயம் பகுதிகளில் அடுத்தடுத்த விழாக்கள் நடைபெற உள்ளதால் வழக்கத்தை விட பக்தர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்க வாய்ப்புள்ளதாக விழா கமிட்டியினர் தெரிவித்தனர். மேலும் பொதுமக்களின் நலன் கருதி ஒவ்வொருவரும் தங்கள் நாட்டின் பாதுகாப்பு கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும் என கேட்டு கொண்டனர்.

Tags : Corona ,Adirimalam Temple Panguni ,festival ,
× RELATED கொரோனா வைரஸை சீனா திட்டமிட்டு...