×

அதிகமான விபத்துக்கள் நடந்து வருவதால் அரசு மருத்துவமனையில் விபத்து அவசர சிகிச்சை பிரிவு

சென்னை, மார்ச் 20:சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, துணை கேள்வி எழுப்பி திட்டக்குடி எம்எல்ஏ வெ.கணேசன்(திமுக) பேசியதாவது:
திட்டக்குடி சட்டமன்ற தொகுதியில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த பகுதியில் அதிகமான விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன. இந்த விபத்தால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக காப்பாற்ற வேண்டுமென்றால், ஒன்று அங்கிருந்து 85 கி.மீ. தூரத்தில் இருக்கும் திருச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். அதே போல் விழுப்புரம் கொண்டு செல்ல வேண்டுமென்றால் 80 கி.மீ. தாண்டி தான் செல்ல வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. ஆகவே, அமைச்சர் திட்டக்குடி அரசு மருத்துவமனையில் விபத்து அவசர சிகிச்சை பிரிவு ஒன்றை அமைத்து தர வேண்டும். அதே போல் உள்நோயாளிகள் தங்குவதற்கு கட்டிட வசதியில்லாமல் இருக்கிறது.

தலைவர் கலைஞர் இருந்த போது நாங்கள் இரண்டு கட்டிடங்களை புதியதாக கட்டி துவக்கி வைத்தோம். இப்போது உள்நோயாளிகள் தங்குகின்ற வசதியில்லாமல் இருக்கின்ற அந்த நிலையை கருத்தில் கொண்டு புதிய கட்டிடம் ஒன்று கட்டித்தர வேண்டும். அதே மாதிரி சிடி ஸ்கேன் இல்லை. சிடி ஸ்கேன் உடனே வாங்கி தருவற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி வேண்டும். இந்த கருத்துக்களை எல்லாம் மனதில் கொண்டு உடனடியாக இதை நிறைவேற்றித்தர வேண்டும்.

அமைச்சர் சி.விஜயபாஸ்கர்: விழுப்புரத்திற்கும், திருச்சிக்கும், நடுவில் விபத்து கால சிகிச்சை மையங்கள் அவசியம் தேவை என்ற கருத்தை உறுப்பினர் வலியுறுத்தினார். திருச்சி, விழுப்புரம் இரண்டிற்கும் நடுவில் பெரம்பலூரில் மாவட்ட தலைமை மருத்துவமனை விபத்துகால சிகிச்சை மையமான சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன் போன்ற கருவிகள் எல்லாம் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.

விழுப்புரத்திலிருந்து திருச்சிக்கு நடுவில், இப்போது தான் சமீபத்தில் ஒரு மாதத்திற்கு முன்பாக விபத்து கால சிகிச்சை நிலைப்படுத்தும் மையத்தை ரூ.1 கோடி செலவில் உருவாக்கி ஒரு நாளைக்கு 15, 16 அவசர சிகிச்சைகள் அங்கே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உறுப்பினர் குறிப்பிட்டிருக்கின்றபடி புதிய கட்டிடப்பிரிவு, டிஜிட்டல் போன்ற பிரிவுகளை அமைப்பது குறித்து அரசு கனிவுடன் பரிசீலிக்கும்.

Tags : Accident Emergency Department ,Government Hospital ,
× RELATED அரசுமருத்துவமனை 3வது மாடியில் இருந்து குதித்து கொரோனா நோயாளி தற்கொலை