துறையூர் அருகே 6 ஆண்டுக்கு பின் மின் இணைப்பு தரப்பட்ட அங்கன்வாடி மையம்

துறையூர், மார்ச் 20: துறையூர் அருகே கட்டி முடித்து 6 ஆண்டாகியும் அங்கன்வாடி மையத்திற்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை என தினகரனில் வந்த செய்தி எதிரொலியால் இம்மையத்திற்கு கலெக்டர் மற்றும் பிடிஓ மின் இணைப்பு வழங்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

துறையூர் அடுத்த புத்தனாம்பட்டி முசிறி ஒன்றியத்தை சேர்ந்தது. புத்தனாம்பட்டியில் மூக்கன்பிள்ளை தெரு மாரியம்மன் கோயில் அருகில் இருக்கும் அங்கன்வாடி மையத்தில் கட்டப்பட்டு கிட்டத்தட்ட 6 வருடத்திற்கு மேலாகியும் இதுவரை மின் இணைப்புகள் தரப்படவில்லை. இந்த அங்கன்வாடியில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வந்தனர். தற்போது அதன் அருகில் கால்நடை மருத்துவமனை மற்றும் காட்டுப்பகுதி என்பதால் கொசுக்கள், ஈக்களின் தொல்லையால் பச்சிளம் குழந்தைகள் அதிகம் அவதிப்படுவதாகவும், இதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அங்கன்வாடிக்கு அனுப்புவதற்கு மறுத்து வீட்டிலேயே வைத்துக்கொண்டு இருப்பது தெரிய வந்தது. இதனால் இம்மையத்திற்கு குழந்தைகள் வருகையும் குறைந்தது.
Advertising
Advertising

இந்த கட்டிடம் 2013-14ம் ஆண்டில் ரூ.5 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டது. கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு விடப்பட்ட நாளிலிருந்து இதுவரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை. இந்த அங்கன்வாடி மையத்திற்கு மின் இணைப்பு வழங்குவதற்கு பல முறை கிராமசபை கூட்டத்திலும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் புகார் அளித்தும், எந்தவொரு அதிகாரியும் கண்டுகொள்ளவில்லை. அங்கன்வாடி பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்காக மின்விளக்கு மற்றும் மின்விசிறி அமைத்துக் கொடுப்பதற்கு பல தன்னார்வலர்கள் முன்வந்தும் மின் இணைப்பு இல்லாததால் அது குறித்த உதவிகள் கிடப்பில் போடப்பட்டது.

மேலும் மின் இணைப்பு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த மின் பெட்டியில் வயர்கள் அறுந்து தொங்கி கிடந்ததோட குருவிகள் கூடு கட்டி வாழும் கூடாரமாகி விட்டது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இந்த அங்கன்வாடி மையத்திற்கு மின் இணைப்புகள் வழங்கி, மேலும் பச்சிளம் குழந்தைகளை இம்மையத்தில் பயில்வதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் விடுத்த கோரிக்கை கடந்த 6ம் தேதி தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் முசிறி வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன் நடவடிக்கை எடுத்து இந்த அங்கன்வாடிக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது.  இதற்கு கலெக்டர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் தினகரன் நாளிதழுக்கு இப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Related Stories: