×

திருமணமான 6 மாதத்தில் மனைவி தற்கொலை போலீஸ் கணவர் மீது நடவடிக்கை கோரி உறவினர்கள் சாலை மறியல்

ராஜபாளையம், மார்ச் 20: இளம்பெண் தற்கொலை தென்காசி மாவட்டம், பெருமாள்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி. சிவகிரி காவல்நிலையத்தில் தலைமைக்காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் பாட்டகுளம் பகுதியை சேர்ந்த இலக்கியாவிற்கும் (27) கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணமானது. இந்நிலையில் இலக்கியா நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவரது உடலை மீட்ட சிவகிரி போலீசார், ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் இரவு கொண்டு வந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த இலக்கியாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ராஜபாளையம் அரசு மருத்துவமனை முன் நேற்று திரண்டனர். இலக்கியாவின் சாவில் மர்மம் உள்ளது.

அவரது கணவர், மாமனார், மாமியார் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். அப்போது விசாரணைக்கு வந்த கோட்டாட்சியர் காளிமுத்துவை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் தென்காசி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த ராஜபாளையம் டிஎஸ்பி நாகசங்கர், இன்ஸ்பெக்டர்கள் மாரியப்பன், பார்த்திபன், கரிவலம்வந்தநல்லூர் இன்ஸ்பெக்டர் சித்ரகலா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்படும் என உறுதி அளித்ததை அடுத்து கலைந்து சென்றனர்.

இலக்கியாவின் உறவினர்கள் கூறுகையில், ‘‘திருமணமான 6 மாதத்தில் பலமுறை நகை கேட்டு கருப்பசாமி சண்டை போட்டுள்ளார். சமீபத்தில் சண்டை போட்டு தாய் வீட்டிற்கு வந்த இலக்கியாவை, சமாதானம் செய்து கணவர் வீட்டில் விட்டோம். சம்பவத்தன்று நன்றாக பேசிய இலக்கியா, திடீரென தூக்குப்போட்டு கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இது தற்கொலை அல்ல. கொலைதான். கணவர் உள்ளிட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்தனர்.

Tags : Relatives ,suicide ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை