×

மாவட்டம் முழுவதும் இணையத்தள சர்வர்கள் முடக்கம் சான்றிதழ் பெறுவதில் சிக்கல்

சிவகங்கை, மார்ச் 20: சிவகங்கை மாவட்டத்தில் அரசு இணையத்தள சர்வர்கள் அடிக்கடி செயல்படாமல் போவதால் அனைத்து தரப்பினரும் கடும் அவதியடைந்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் முழுவதும் மின் ஆளுமை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து தாலுகா அலுவலகம், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி, பேரூராட்சி, நகராட்சி அலுவலகம், பொது சேவை மையம், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் இதற்கான இ.சேவை மையங்கள் உள்ளன. இத்திட்டம் மூலமே சாதி, வருமானம், இருப்பிடம், வாரிசுச் சான்று, முதல் பட்டதாரி சான்று, ஆதரவற்ற விதவை சான்று உள்ளிட்ட வருவாய்த்துறை மூலம் பெறப்படும் சான்றுகளை பெறலாம்.

அரசின் பல்வேறு நிதியுதவி திட்டம், பாஸ்போர்ட் பெற விண்ணப்பம், எல்ஐசி தவணை செலுத்துதல் உள்ளிட்டவைகளும் இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் இத்திட்டத்திற்கான இணையத்தளத்தில் உள்ள சர்வர்கள் அடிக்கடி செயல்படாமல் போகின்றன. கல்வி ஆண்டு தொடக்கம் என்பதால் சாதி, வருமானம், இருப்பிடம் உள்ளிட்ட பல்வேறு சான்றுகளை பெறுவதற்காக பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெற்றோர்கள் இ.சேவை மையங்கள் செல்கின்றனர்.

இப்பணிகளை இ.சேவை மையங்கள் மூலம் அரசு இணையத்தளத்தில் தான் செய்ய முடியும். ஆனால் இந்த சான்றிதழ்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இதுபோல் விவசாயிகள், பொதுமக்கள் பல்வேறு சான்றிதழ்கள் பெற சென்று ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். சிவகங்கை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இ.சேவை மையங்களில் இணையத்தளம் பிரச்சினை, சர்வர் பிரச்சினை என சான்றிதழ் தருவதில் இழுத்தடிப்பு செய்கின்றனர்.

பொதுமக்கள் கூறியதாவது,‘ஏற்கனவே இருந்த நடை முறைகளை மாற்றி இ.சேவை மையங்கள் மூலம் மட்டுமே தற்போது அனைத்து சான்றிதழ்களையும் பெற முடிகிறது. ஆனால் அதற்கான முழுமையான ஏற்பாடுகளை அரசு செய்யவில்லை. பல நாட்கள் இணையத்தளம் வேலை செய்வதில்லை. இணையத்தளம் வேலை செய்தாலும் சம்பந்தப்பட்ட சர்வர் பிரச்சினை என சான்றிதழ் விண்ணப்பிப்பது, பெறுவது என தொடர்ந்து அலைய வேண்டிய நிலை உள்ளது. தொடர்ந்து பாதிப்பு ஏற்படாமல் உரிய நடவடிக்கை எடுத்து சான்றிதழ் கிடைக்கச் செய்ய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனர்.

Tags : district ,
× RELATED கணவருடன் பிரச்ன: காதலில் தோற்பது பழகிவிட்டது - வனிதா விளக்கம்