×

கொரோனா வைரஸ் பீதியால் நாட்டுக்கோழி விலை கடும் உயர்வு கருங்கோழி கிலோ ரூ.800க்கு விற்பனை

பரமக்குடி, மார்ச் 20: கொரோனா வைரஸ் எதிரொலியால் பிராய்லர் கோழி விலை குறைந்த நிலையில், நாட்டுகோழி, கருங்கோழி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளையும் அச்சுறுத்தியுள்ள கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நம்நாட்டிலும் 100க்கும் மேற்பட்டோ பாதிக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில் கோழி இறைச்சியின் மூலமாக கொரோனா வைரஸ் பரவுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வருகிறது. இதனால் ஒரு கிலோ பிராய்லர் கோழி இறைச்சி 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கோழி இறைச்சியின் விலை கடுமையாக சரிந்துள்ளது. குறைந்தபட்சமாக ஒரு கிலோ கோழி இறைச்சி வெறும் 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கோழி இறைச்சி, முட்டையின் விலை கடுமையாக சரிந்துள்ளது. இது கோழி கடை விற்பனையாளர்கள் மற்றும் கோழிப்பண்ணை உரிமையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுபோல் முட்டையின் விலையும் தற்போது சரிந்து விட்டது. கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முட்டை விலை சரிந்துள்ளது. ஒரு முட்டை ரூ.2.65க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் நோய் எதிர்ப்பு சக்தி உடைய நாட்டு கோழி மற்றும் கருங்கோழிக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால் விலையும் அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு எதிரொலியால் பிராய்லர் கோழிக்கறியை பொதுமக்கள் வாங்க மறுத்து, தற்போது நாட்டு கோழியை அதிகளவில் வாங்கி சாப்பிட துவங்கியுள்ளனர். இதனால் கடந்த மாதம் கிலோ ரூ.450 க்கு விற்ற நாட்டுகோழி தற்போது ரூ.600க்கு விற்பனை செய்யபடுகிறது.

இதுகுறித்து கருங்கோழி மத்திய பிரதேசத்தை பூர்வீகமாக கொண்டது. ஆறு மாதத்தில் ஒரு கிலோ முதல் ஒன்றேகால் கிலோ அளவு எடை வளரக்கூடியது. இரு மாதங்களுக்கு முன்புவரை கருங்கோழி ஒரு கிலோ ரூ.600க்கு விற்கபட்டது. தற்போது ரூ.200 விலை உயர்ந்து ஒரு கிலோ ரூ.800க்கு விற்பனை செய்யபடுகிறது. இதேபோல் ரூ.10க்கு விற்ற நாட்டுகோழி முட்டை ரூ.15 ஆகவும், ரூ.15க்கு விற்ற கருங்கோழி முட்டை ரூ.25 ஆகவும் விலை உயர்ந்துள்ளது. இயற்கை உணவுகளை அளித்து வளர்த்து வருவதால் தற்போது அதிகளவில் நாட்டுகோழி, கருங்கோழிக்கு மவுசு ஏற்பட்டுள்ளதால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது என கோழி வளர்ப்போர் கூறினர்.

Tags : Coronavirus panic ,
× RELATED கொரோனா வைரஸ் பீதி: குமாரபுரம் - வடக்கன்குளம் சாலையை அடைத்த இளைஞர்கள்