×

ராமேஸ்வரம் பகுதியில் உள்ளூர்வாசிகளை ஏற்ற மறுக்கும் ஆட்டோக்கள் எஸ்பி எச்சரிக்கையால் கலக்கத்தில் போலீசார்

ராமேஸ்வரம், மார்ச் 20:  ராமேஸ்வரத்தில் இயங்கும் ஆட்டோக்கள் உள்ளூர்வாசிகளை ஏற்ற மறுப்பது, விதிகளை மீறிச் செல்வது போன்ற புகார்களை போலீசார் கண்டுகொள்ளாமல் இருந்த நிலையில் ராமநாதபுரம் எஸ்.பி. வருண்குமார் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது உள்ளூரில் பணியாற்றும் போலீஸ் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் பூட்டியிருக்கும் வீடு,கடைகளில் திருட்டு, சாலையில் நடந்து செல்பவர்களிடம் பைக்கில் வந்து செயின் பறிப்பு போன்ற பல சம்பவங்கள் நடந்தும் இதுவரை எதுவும் கண்டுபிடிக்கப்பட வில்லை. கோயில் திருவிழா, அமாவாசை போன்ற விசேஷ காலங்களில் தீர்த்த கடற்கரை மற்றும் பொது இடங்களில் நடைபெறும் திருட்டு சம்பவங்கள் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுக்க வருபவர்களும் போலீசாரால் புறக்கணிக்கப்படுகின்றனர்.

குடிபோதையில் இருசக்கர வாகனம் ஒட்டுபவர்கள், சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகளிடையே பதற்றத்தையும் விபத்தையும் ஏற்படுத்தும் வகையில் பைக்கில் அதிவேகமாக சீறிக்கொண்டு செல்பவர்கள் மீது நடவடிக்கை இல்லை. அதிக பணம் கிடைக்கும் என்பதால் உள்ளூர்வாசிகளை ஏற்ற மறுத்து வெளியூர்களில் இருந்து வரும் யாத்திரீகர்கள், சுற்றுலா பயணிகளை ஆட்டோக்களில் ஏற்றிச் செல்வது, அதிக பயணிகளை ஏற்றுவதுடன், முறையில்லாமல் அதிகளவில் கட்டணம் பெறும் ஆட்டோ ஓட்டுனர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பதில்லை.
ராமேஸ்வரத்தில் வாகன போக்குவரத்தில் அன்றாடம் பொதுமக்கள் சந்தித்து வரும் இந்த பிரச்னைகள் குறித்து பொதுமக்கள் தரப்பில் பல்வேறு புகார்கள் செய்யப்பட்டும் இங்குள்ள போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வந்தனர். இங்குள்ள விதி மீறல்கள் பல்வேறு அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்களிடம் இருந்து மாவட்ட நிர்வாகத்திற்கும், மாவட்ட போலீஸ் நிர்வாகத்திற்கும் தொடர்ந்து புகார் சென்றது. இந்நிலையில் ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் குறிப்பாக ராமேஸ்வரம் நகரில் விதிமீறி இயங்கும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் ராமநாதபுரம் எஸ்.பி. வருண்குமார், ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இறுதி எச்சரிக்கை செய்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதில் ராமேஸ்வரம் ரயில் மற்றும் பேருந்து நிலையத்தில் உள்ளூர் வாசிகளை ஆட்டோக்களில் ஏற்ற மறுப்பது, அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு சுற்றுலா பயணிகளை மட்டுமே ஏற்றுவது, பேருந்து நிலையத்தில் அரசு நகர் பேருந்துகளில் செல்ல விரும்பும் பயணிகளை இடையூறு செய்து ஆட்டோக்களில் ஏற்றி சென்று கூடுதல் கட்டணம் பெறுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வரும் ஆட்டோ ஓட்டுனர்கள் இதுபோன்ற நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும்.

மேற்கு கோபுர வாசல், திட்டகுடி, போத்தார் சத்திரம், ராமகிருஷ்ணமடம் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக ஆட்டோக்களை நிறுத்தி வைத்து தொல்லை தருவது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும். ஆட்டோக்களில் அதிகளவில் பயணிகளை ஏற்றிச் செல்வது, முறையான ஆவணங்கள் இன்றி, சீருடை அணியாமல் ஆட்டோ ஓட்டுவது, நிறுத்தத்தில் நிறுத்தாமல் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையோரங்களில் நிறுத்துவதை தவிர்க்க வேண்டும். அனுமதி இல்லாத ஆட்டோக்களில் ஓட்டக்கூடாது. இவை அனைத்தும் தண்டனைக்குரிய குற்றம் என்பதால் ஆட்டோ ஓட்டுனர்கள் இதனை இறுதி எச்சரிக்கையாக கருதி தங்களது நடவடிக்கைகளை திருத்திக்கொள்ள வேண்டும்.

காவல் துறையினரின் வாகன சோதனையின் போது உரிய ஆவணங்கள் இல்லாத பட்சத்தில் ஒட்டுனர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வாகனம் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் பகுதியில் இயங்கும் ஆட்டோ ஒட்டுனர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரே இறுதி எச்சரிக்கை விடுத்து களத்தில் இறங்கியுள்ளது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. அதேநேரத்தில் எதையும் கண்டுகொள்ளாமல் உள்ளூரில் பணியாற்றி வரும் அதிகாரிகள் மற்றும் போலீசார் மத்தியிலும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags : area ,SP ,locals ,Rameswaram ,
× RELATED மாதனூரில் மனைவியை சரமாரியாக...