இன்ஸ்பெக்டர் மீதான ஒழுங்கு நடவடிக்கைக்கு இடைக்கால தடை

மதுரை, மார்ச் 20: பிரசவத்தின் போது கர்ப்பிணி பலியான விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் மீதான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் உத்தரவுக்கு ஐகோர்ட் மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. மதுரை கோ.புதூரைச் சேர்ந்த மணிமுத்து ஐகோர்ட் மதுரையில் தாக்கல் செய்த மனு: எனது மனைவி சக்திகாளி. கர்ப்பிணியான இவர் கோ.புதூர் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடர் பரிசோதனையில் இருந்தார். கடந்த 14.9.2019ல் பிரசவ வலி ஏற்பட்டது. பணியிலிருந்த நர்ஸ் உள்ளிட்டோர் அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை. அங்கிருந்த துப்புரவு பணியாளர் பிரசவம் பார்த்துள்ளார். அதிக ரத்தபோக்கு ஏற்பட்டது. தாமதமாக வந்த ஆம்புலன்ஸ் மூலம் மேல்சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், என் மனைவி இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் மற்றும் நர்ஸ் உள்ளிட்ட பணியாளர்களின் கவனக்குறைவால் தான் என் மனைவி இறந்துள்ளார் எனக்கூறி ஐகோர்ட் கிளையில் மணிமுத்து வழக்கு தொடர்ந்தார்.

Advertising
Advertising

இதை விசாரித்த தனி நீதிபதி, கோ.புதூர் இன்ஸ்பெக்டர் மற்றும் மதுரை அரசு மருத்துவமனை பிறப்பு-இறப்பு பதிவாளர் ஆகியோர் தங்களது பணியை முறையாக மேற்கொள்ளவில்லை. எனவே, இவர்கள் மீது பணி விதிப்படி உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். சக்திகாளி இறந்த வழக்கை வேறொரு அதிகாரிக்கு மாற்ற போலீஸ் கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தார். இதை எதிர்த்து இன்ஸ்பெக்டர் தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் அப்பீல் செய்யப் பட்டது. இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி ஆகியோர் இன்ஸ்பெக்டர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார்.

Related Stories: