கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஏப்ரலில் மாபெரும் ஆர்ப்பாட்டம் மாற்றுத்திறனாளிகள் சங்கம் அறிவிப்பு

திண்டுக்கல், மார்ச் 20: மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை சட்டமன்றத்தில் நிறைவேற்றாவிட்டால் ஏப்ரல் மாதம் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மாற்றுத்திறனாளிகள் சங்கம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாவட்ட செயலாளர் பகத்சிங் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் நேற்று திண்டுக்கல்லிலும், இன்று பழனியிலும் மாற்றுத்திறனாளிகளின் கீழ்க்கண்ட கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக வருகின்ற சட்டசபை கூத்தத்தொடரிலேயே நிறைவேற்ற வலியுறுத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை திரட்டி மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தோம்.

இந்நிலையில் எங்களை தொடர்புகொண்ட அதிகாரிகள், மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் அனைத்தையும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருப்பதாகவும் வருகின்ற சட்டசபை கூட்டத்தொடரில் இதற்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாகவும், கொரோனா பரவி வருவதால் போராட்டத்தை ஒத்தி வைக்க வேண்டுமாறும் வேண்டுகோள் விடுத்தனர். அதன் அடிப்படையில் நடைபெற இருந்த போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்க முடிவு செய்துள்ளோம். அதிகாரிகள் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை தமிழக அரசு தீர்க்காவிட்டால் ஏப்ரல் மாதம் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெறும் என்பதை இதன் மூலமாக தெரிவித்துக்கொள்கிறோம்.

மாற்றுத்திறனாளிகளின் நீண்டகால கோரிக்கைகள்: மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையை குறைந்தபட்சம் ரூ.3000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்ட, கடும் ஊனமுற்ற, மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5000 உதவித்தொகை வழங்கிட வேண்டும்.2018 அரசானை 41ன் படி 40 சதவீதம் ஊனம் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் குறிப்பாக 18 வயதுக்கு கீழ் உள்ள சட்டம் அங்கீகரித்துள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவித்தொகை வழங்கிட வேண்டும்.

அனைத்து அரசுப் பஸ்களிலும் 75 சதவீத கட்டண சலுகை வழங்க வேண்டும் என்ற 2008ம் ஆண்டு அரசாணைப்படி நகரப் பஸ்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகை கட்டணம் வழங்கிட வேண்டும். நூறுநாள் வேலைத்திட்டத்தில் பணி செய்யும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஊனமுற்றோர் உரிமைச்சட்டப்படி 25 சதவீதம் கூடுதலாக 125 நாட்களாக வேலையை உயர்த்தி முழு ஊதியம் வழங்கிட வேண்டும். தனியார் துறைகள் அனைத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு வழங்கிட வேண்டும். மாற்றுத்திறனாளிகள் உரிமைச்சட்டப்படி 21 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கும் அடையாள சான்று வழங்கிட வேண்டும். கலெக்டர் மற்றும் சப்-கலெக்டர் தலைமையில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டங்களை முறையாக நடத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.

Related Stories: