கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 5 தனியார் மருத்துவமனைகளில் தனிமை வார்டுகள் அமைப்பு

சேலம், மார்ச் 20:  சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 5 தனியார் மருத்துவமனைகளிலும் சிறப்பு தனிமை வார்டு அமைக்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சர்வதேச அளவில் கொரோன வைரஸ் தாக்கம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை, கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 175க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தும் வார்டுகள் தயார் செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கொரோனா வைரஸ் மூச்சுக்காற்று, இருமல் மற்றும் தும்பல் மூலமும் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவுகிறது. வெளிநாடுகளில் இருந்து சென்னை, திருச்சி, மும்பை, கொல்கத்தா மற்றும் பெங்களூரு விமானம் நிலையங்கள் மூலமாக சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் சேலத்திற்கு வந்துள்ளனர். இவர்கள் அனைவரும், அவரவர் வீடுகளிலேயே 28 நாட்கள் வரை தானாகவே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து, சேலம் அரசு மருத்துவமனை தவிர்த்தும், மேட்டூர் அரசு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தும் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், மாவட்டத்தில் உள்ள 5 தனியார் மருத்துவமனைகளில் தனி சிறப்பு வார்டு மற்றும் தனிைம வார்டு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தனியார் மருத்துவமனையிலும் 5 படுக்கைகள் கொண்ட வார்டுகள் அமைக்கப்பட்டு, அதற்கான மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா அறிகுறிகளுடன் யாரேனும் வந்தால் சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் வராமல் தடுக்க, சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ள அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் பொதுமக்கள் தவறாமல் கடைபிடித்து, முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

>