கொரோனா தடுப்பு நடவடிக்கை மாதேஸ்வரன் கோயிலில் யுகாதி விழா ரத்து

மேட்டூர், மார்ச்  20: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, கர்நாடக மாநிலத்தில் உள்ள மாதேஸ்வரன் கோயிலில் யுகாதி விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், வெளியூர் பக்தர்கள் கோயிலுக்கு வர முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள மாதேஸ்வரன் மலைக்கோயிலுக்கு தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடகாவை சேர்ந்த திரளான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோயிலில், ஆண்டுதோறும் யுகாதி திருவிழா வெகு சிறப்பாக நடப்பது வழக்கம். 5 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் சுமார் 5 லட்சம் பக்தர்கள் கூடுவார்கள். கர்நாடக மாநிலத்தில் இக்கோயில் இருந்த போதிலும் தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் சென்று வருகின்றனர்.

நடப்பு ஆண்டில் இம்மாதம் 21ம் தேதி முதல் 25ம் தேதிவரை யுகாதி திருவிழா கொண்டாட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், நாடு முழுவதும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக, மாதேஸ்வரன் மலையில் நடைபெறவிருந்த யுகாதி திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக,கோயில் செயல் அலுவலர் ஜெயவிபவசாமி தெரிவித்துள்ளார்.

அதேபோல், பெரிய தேரோட்டமும் ரத்து செய்யப் பட்டுள்ளதாகவும், பக்தர்கள் மாதேஸ்வரன் மலைக்கோயிலுக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள் மூடப்பட்டிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, பக்தர்கள் கோயிலுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளதால் மாதேஸ்வரன் கோயில் வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும், கர்நாடக-தமிழக எல்லையான பாலாறு வழியாக வாகனங்கள் வரவும், பொதுமக்கள் வருகைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: