பெட்ரோலிய குழாய் பதிக்க எதிர்ப்பு தாலுகா அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

மேட்டூர், மார்ச் 20:  விளைநிலங்கள் வழியாக பெட்ரோலிய குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து, மேட்டூர் தாலுகா அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம் இருகூரிலிருந்து, கர்நாடக மாநிலம் தேவனகுறிச்சி வரை 312 கிலோ மீட்டர் நீளத்திற்கு, விளைநிலங்கள் வழியாக குழாய்கள் பதித்து, கச்சா எண்ணெய் கொண்டு செல்ல பாரத் பெட்ரோலிய நிறுவனம் பணிகளை துவக்கியுள்ளது. சேலம் மாவட்டம் நங்கவள்ளி மற்றும் மேச்சேரி ஒன்றியங்களில் சின்னசோரகை, நங்கவள்ளி, சூரப்பள்ளி, தோரமங்கலம், குட்டப்பட்டி, விருதாசம்பட்டி, பொட்டனேரி, மல்லிகுந்தம் கிராமங்கள் வழியாக குழாய்கள் பதிக்கப்படுகிறது. இதற்கு இப்பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

விவசாயிகளை சமாதானப்படுத்தவும், அவர்களின் கோரிக்கை கேட்கவும் நேற்று மேட்டூர் தாலுகா அலுவலகத்தில் பாரத் பெட்ரோலியம் நிறுவன அதிகாரிகளும், விவசாயிகளும் சந்திக்கும் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நூற்றுக்கணக்கான விவசாயிகள் வந்த நிலையில், கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், ஏமாற்றமடைந்த விவசாயிகள் பெட்ரோலிய குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து மனு அளிப்பதாகவும், மனு பெற்றதற்கான ஒப்புகை சீட்டு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் தாசில்தார் அதனை ஏற்காததால், மேட்டூர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர். பின்னர் வருவாய்த் துறை அதிகாரிகளின் சமாதானத்தை ஏற்று  போராட்டத்தை கைவிட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க சேலம் மாவட்ட தலைவர் தங்கவேல், செயலாளர் ராமமூர்த்தி, நாமக்கல் மாவட்ட செயலாளர் பெருமாள் உட்பட ஏராளமான விவசாயிகள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

Related Stories:

>