ரயில்வே ஸ்டேஷனில் கொரோனா தடுப்பு நடவடிக்கை கேரள ரயில்களில் வரும் பயணிகள் பரிசோதிப்பு

சேலம், மார்ச் 20: சேலம் ரயில்வே ஸ்டேஷனில் கேரளா ரயில்களில் வந்திறங்கும் பயணிகளை, தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் பரிசோதித்து வருகின்றனர். மேலும், கொரோனா குறித்து மெகா மைக் மூலம் ரயில்வே போலீசார் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்று பற்றி, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரயில்வே ஸ்டேஷன்களில் தீவிர பரிசோதனை மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். சேலம் ரயில்வே ஸ்டேஷனில், 24 மணி நேரமும் செயல்படும் மருத்துவ மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு, ஸ்டேஷனுக்கு வரும் பயணிகளை பரிசோதிக்கின்றனர். இதுபோக கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று முதல், தமிழக ரயில்வே போலீசாரும் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தொடங்கியுள்ளனர். கேரளா ரயில்களில் இருந்து இறங்கும் அனைத்து பயணிகளையும் தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம், காய்ச்சல் இருக்கிறதா? என போலீசார் பரிசோதிக்கின்றனர். யாருக்காவது காய்ச்சல் இருப்பது தெரியவந்தால், அவர்களை சிறப்பு மருத்துவ மையத்திற்கு அனுப்பி வைக்கின்றனர். மேலும், இன்ஸ்பெக்டர் இளவரசி, எஸ்ஐ பாலமுருகன் தலைமையில் மெகா மைக் மூலம் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர்.

இந்த அறிவிப்பில், கிருமி நாசினி மற்றும் சோப்புகள் மூலம் அடிக்கடி கைகளை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். சளி, இருமல், காய்ச்சல் இருந்தால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். அத்தியாவசிய தேவையில்லாமல் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தினர். இந்த விழிப்புணர்வையும், தெர்மல் ஸ்கேனர் கருவி பரிசோதனையையும் தொடர்ந்து ரயில்வே போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

Related Stories:

>