×

கொரோனாவால் ஆர்டர்களை ரத்து செய்த வியாபாரிகள் பள்ளிபாளையத்தில் 10 கோடி மதிப்பிலான ஜவுளிகள் தேக்கம்

பள்ளிபாளையம்,மார்ச்20: கொரோனா வைரஸ் பாதிப்பால் பள்ளிபாளையம் ஜவுளி வர்த்தகம் கடுமையான சரிவை சந்தித்துள்ளது. வெளிமாநில ஆர்டர்கள் ரத்தாகியதால், உற்பத்தி செய்யப்பட்ட 10 கோடி மதிப்பிலான ஜவுளிகள் தேங்கியுள்ளது. இதையடுத்து இந்த வாரத்துடன் நெசவுக் கூடங்களை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் லுங்கி, துண்டு, வேட்டி, சேலை, வீட்டு உபயோகத்திற்கான துணி ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் துணிகள் ஈரோடு ஜவுளி மார்க்கெட் மூலம் வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இதுதவிர பல ஏற்றுமதி நிறுவனங்கள், நேரடியாக பல்வேறு நாடுகளுக்கும் துணிகளை ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

ஜவுளித்தொழில் கடந்த 5ஆண்டுகளாவே பெரும் தேக்க நிலையில் இருப்பதால் ஜவுளி உற்பத்தியாளர்களும், விசைத்தறி உரிமையாளர்களும் வேறு தொழிலுக்கு மாறி வருகின்றனர். ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரிவிதிப்பு, போன்ற பல இடையூறுகளையும் கடந்து மெல்ல மெல்ல தனது சுய அடையாளத்தை இழந்து வந்துள்ள ஜவுளித்தொழிலை தற்போது கொரோனா வைரஸ் ஆட்டம் காண வைத்துள்ளது. பள்ளிபாளையம் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு, ஈரோடு ஜவுளி மார்க்கெட்டே முதன்மை வியாபார தளமாக இருந்து வருகிறது. கொரோனா பிரச்னையால் ஈரோடு ஜவுளி மார்க்கெட் மூடப்பட்டதால் பள்ளிபாளையத்தில் ஜவுளி உற்பத்தியை நிறுத்தும் நிலைக்கு வந்துள்ளது. ஈரோட்டில் உள்ள பெரிய துணிக்கடைகளில் மக்கள் கூட்டத்தை தவிர்க்க, மாவட்ட நிர்வாகம் கடைகளை திறக்க தடை போட்டுள்ளது.

இதனால் ஜவுளி விற்பனையில் மந்த நிலை நீடித்து வருகிறது. இதுதவிர கேரளா, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு இங்கிருந்து ஜவுளிகள் அனுப்பப்பட்டு வந்தது. தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா பிரச்னையால் அங்குள்ள ஜவுளி நிறுவனங்கள் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டு உள்ளது. இதனால் இங்குள்ள ஜவுளிகள் விற்பனைக்கு அனுப்புவதும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட ஜவுளிகளுக்கான பணமும், தவணை காலம் தாண்டியும் இங்குள்ள உற்பத்தியாளர்களுக்கு வந்து சேரவில்லை. கொரோனோ அவசர நிலையால் அங்குள்ள வியாபார சூழ்நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால், ஏற்கனவே பெறப்பட்ட ஜவுளி ஆர்டர்களும் ரத்து செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே பல்வேறு பிரச்னைகளால் உற்பத்தி செய்த ஜவுளிகள் விற்பனையாகாமல் மலை போல குவித்து வைத்துள்ளனர்.

இந்த நிலையில், தற்போது கொரோனா வைரஸ்  காரணமாக இங்குள்ள ஜவுளி உற்பத்தியாளர்கள் துணி உற்பத்தியை நிறுத்தும் நிலைக்கு ஆளாகி உள்ளனர். இதனால் விசைத்தறி கூடங்களுக்கு வரும் சனிக்கிழமையில் இருந்து விடுமுறை விடவும் முடிவெடுத்துள்ளனர். இதனால் விசைத்தறி தொழிலாளர்கள், அதை சார்ந்த தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிபாளையம் ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கந்தசாமி கூறியதாவது: ஜவுளித்தொழிலை தொடர்ந்து நடத்த முடியவில்லை. ஜவுளிகள் விற்பனையாகாமல் தேங்கி உள்ளது. தற்போதைய நிலையில் பள்ளிபாளையத்தில் மட்டும் சுமார் 10 கோடி மதிப்புள்ள ஜவுளிகள் விற்க முடியாமல் தேங்கி கிடக்கிறது. ஈரோடு ஜவுளி மார்க்கெட் மூடப்பட்டுள்ளதால் இங்கு மேலும் மேலும் ஜவுளிகள் தேங்கி வருகிறது.  இதனால் நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பிரச்னை தீர்ந்து, இயல்பு நிலைக்கு வந்தால் தான் மீண்டும் ஜவுளிஉற்பத்தி நடைபெறும் என்றார்.

இதுகுறித்து பெடக்ஸில் முன்னாள் துணைத்தலைவர் கருணாநிதி கூறியதாவது: இங்கு உற்பத்தி செய்யப்படும் துணிகளை வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கிறோம். 3 மாதத்தில் இந்த துணிகளுக்கான பணம் எங்களுக்கு விற்பனையாளர்கள் கொடுக்க வேண்டுமென்ற ஒப்பந்தம் இருந்த போதிலும், நடைமுறையில் மேலும் சில மாதங்கள் தாமதமாகி விடுகிறது. இதனால் ஜவுளி உற்பத்திக்கான மூலதன செலவு அதிகரித்து விடுகிறது. தற்போதுள்ள கொரோனா பிரச்னையால் வெளிமாநிலங்களில் உள்ள பெரும்பாலான வியாபாரிகள் ஜவுளி வியாபாரத்தை நிறுத்தி வைத்துள்ளனர்.

மேலும் ஏற்கனவே அவர்கள் கொடுத்த ஆர்டர்களை கேன்சல் செய்து வருகின்றனர். ஆர்டர் பெற்று உற்பத்தி செய்த துணிகளை, அவர்கள் திடீரொன கேன்சல் செய்து விட்டதால், இந்த துணிகளை எங்கு யாருக்கு விற்பது என்ற குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஜவுளி உற்பத்தியில் இயல்புக்கு மாறான குழப்பமும், மூலதன முடக்கமும் ஏற்பட்டு தொழில் நட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையிலிருந்து மீள இன்னும் பல வருடங்கள் ஆகலாம் என்றார்.

Tags : Merchants ,Corona ,
× RELATED வணிகர் சங்கங்களின் பேரமைப்பு...