×

இன்று சிட்டுக்குருவிகள் தினம் வீட்டில் கூடு கட்டி சிட்டுக்குருவிகளை பாதுகாக்கும் முன்னாள் ராணுவ வீரர்

போச்சம்பள்ளி, மார்ச் 20: இன்று சிட்டுக்குருவிகள் தினம் கைடபிடிக்கும் நிலையில், போச்சம்பள்ளி அருகே முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் தனது வீட்டில் கூடுகள் கட்டி சிட்டுக்குருவிகளை பாதுகாத்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20ம் தேதி, உலக சிட்டுக்குருவிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. ஆனால், தற்போது சிட்டுக்குருவிகளை பார்ப்பதே அரிதாகி விட்டது. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே செல்லம்பட்டி பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் குமரன்(40) என்பவர் தனது வீட்டில் குருவிகளுக்காக அட்டைப்பெட்டிகள் அமைத்துள்ளார். இதில், சிட்டுக்குருவிகள் கூடு கட்டி  வசித்து வருகின்றன.

பகல் முழுவதும் சுறுசுறுப்பாக பறந்து சுற்றித்திரியும் சிட்டுக்குருவிகள், மாலையானதும் கூட்டிற் திரும்பி விடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளன. மாலை 6 மணிக்குள் கூட்டிற்குள் அடையும் குருவிகள், அதிகாலையிலேயே எழுந்து கீச் கீச் என சப்தமிட்டவாறு குமரன் குடும்பத்தாரை துயில் எழ செய்வதை வழக்கமாக கொண்டுள்ளன.  இதுகுறித்து குமரன் கூறுகையில், ‘எங்கள் வீட்டின் முன் பகுதியில் உள்ள மரத்தில் 2 சிட்டுக்குருவிகள் வந்து அமர்வது வழக்கம். அதனை கண்ட நான் தினமும் அரிசி, ராகி, கம்பு, கேழ்வரகு போன்ற தானியங்களை போட்டு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து வந்தேன்.

இதையடுத்து, 10க்கும் மேற்பட்ட சிட்டுக்குருவிகள் வர துவங்கி,  நாளுக்கு நாள் அதன் எண்ணிக்கை அதிகரித்தது. தற்போது, 30க்கும் மேற்பட்ட குருவிகள் தினமும் வீட்டிற்கு வருகின்றன. அவ்வாறு வரும் குருவிகள் தங்க வசதியாக, அட்டைப்பெட்டிகளில் கூடு போல் உருவாக்கி வைத்துள்ளேன். அதில், சில குருவிகள் வசித்து வருகின்றன. இந்த குருவிகளை யாரும் துன்புறுத்தாமல் பிள்ளைகள் போல் காத்து வருகிறோம். அனைவரும் குருவிகளை பாதுகாக்க முயற்சி எடுக்க வேண்டும்,’ என்றார்.

Tags : soldier ,home ,
× RELATED கொள்ளையர்களால் தாய், மனைவி கொலை...