×

பூசாரிகொட்டாய் அருகே இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

போச்சம்பள்ளி, மார்ச் 20: பூசாரிகொட்டாய் பகுதியில் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மத்தூர் ஒன்றியம், பூசாரி கொட்டாய் பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில வருடங்களுக்கு முன் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. கடந்த ஒரு ஓராண்டுக்கு முன் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுதடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் மத்தூர் பிடிஓ அலுவலகத்தில் புகாரளித்தும், அதிகாரிகள் மெத்தனப்போக்கில் உள்ளனர். குடிநீர் தொட்டி எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். எனவே, சிதிலமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அகற்றி விட்டு, புதிய குடிநீர் தொட்டி அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Poosarikottai ,
× RELATED ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில்...