×

கிருஷ்ணகிரியில் பல்பொருள் அங்காடியில் பயங்கர தீ

கிருஷ்ணகிரி, மார்ச் 20: கிருஷ்ணகிரியில், பல்பொருள் அங்காடி தீப்பற்றி எரிந்ததில் ₹5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. கிருஷ்ணகிரியில் பெங்களூரு சாலையில், லண்டன்பேட்டை பகுதியில் பல்பொருள் அங்காடி செயல்பட்டு வருகிறது. இந்த அங்காடியின் முன்புறம் பானிபூரி கடை மற்றும் ஜூஸ் கடை உள்ளன. இந்நிலையில், நேற்று அதிகாலை 4.30 மணியளவில் அப்பகுதியில் உள்ள ஜூஸ் கடை அருகில் இருந்த குளிர்சாதன பெட்டி(பிரிட்ஜ்) மின் கசிவு காரணமாக தீப்பிடித்தது. அப்போது, தீ வேகமாக பரவியதில் ஆர்.ஓ. மெஷின், பானிபூரி தயாரிக்கும் இயந்திரம், மூலப்பொருட்கள் தீப்பற்றி எரிந்தன. மேலும், ஷட்டரை ஒட்டியுள்ள மின்சார ஒயர் வழியாக கடைக்குள் பரவியது.

இதனை கண்டு அந்த வழியாக சென்ற பொதுமக்கள், கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில், நிலைய அலுவலர் மாது தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று, சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் பொருட்கள், சில எந்திரங்கள், கடையின் வெளியில் இருந்த பேனர்கள் உள்ளிட்டவை எரிந்து நாசம் ஆனது. இதுகுறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : supermarket ,Krishnagiri ,
× RELATED குடோனில் தீவிபத்து