×

கொரோனா பீதியால் மூடல் மாணவர்களுக்கு சத்துணவு முட்டைகள் வினியோகம்

நாமக்கல், மார்ச் 20: தமிழகத்தில் கொரோனா பீதியால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு விட்டது. இதையடுத்து பள்ளிகளில் சத்துணவுடன் வழங்க தருவிக்கப்பட்ட முட்டைகளை, மாணவர்களை பள்ளிக்கு அழைத்து ஒரு வாரத்துக்கு தேவையான முட்டைகளை வீட்டுக்கு கொடுத்து அனுப்பினர்.தமிழகம் முழுவதுமாக கொரோனா வைரஸ் பீதி காரணமாக, கடந்த 17ம்தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. பிளஸ்1, பிளஸ்2  மாணவ, மாணவியருக்கு மட்டும் அரசு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்தில், வாரம் 5 முட்டைகள் இலவசமாக மாணவ, மாணவியருக்கு வழங்கப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 10ம்வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியருக்கு சத்துணவுடன் தினமும் ஒரு முட்டை வழங்கப்படுகிறது. தற்போது பள்ளிகள் மூடப்பட்டு விட்டதால், இந்த வாரத்துக்கு வழங்க வேண்டிய 5 முட்டைகளும், அந்தந்த பள்ளியில் சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கைக்கு ஏற்ப, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சத்துணவு மையங்களுக்கும் ஏற்கனவே முட்டை கான்ட்ராக்டர்கள் அனுப்பி வைத்துவிட்டனர்.

இவை அந்தந்த பள்ளிகளின் சத்துணவு சமைக்கும் அறையில் வைக்கப்பட்டிருந்தது. தற்போது கோடை காலம் என்பதால், ஒரு வாரத்துக்கு மேல் முட்டையை வைத்திருந்தால் அழுகி விடும். எனவே, இந்த முட்டைகளை மாணவ, மாணவியரிடம் கொடுத்து விடும்படி  சத்துணவு மைய அமைப்பாளர்களை பிடிஓக்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் மாணவ, மாணவியரின் பெற்றோரின் செல்போன் எண்ணை வாங்கி, நேற்று சத்துணவு அமைப்பாளர்கள், பள்ளிக்கு வந்து முட்டை வாங்கி செல்லும் படி கூறினர். இதன்படி நேற்று நாமக்கல் அரசு ஆண்கள் தெற்கு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் வந்தனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் 5 முதல் 7 முட்டைகளை சத்துணவு அமைப்பாளர் மற்றும் பணியாளர்கள் வழங்கினர். இலவசமாக முட்டை கிடைத்த மகிழ்ச்சியில் மாணவர்கள் பள்ளியை விட்டு சென்றனர். சத்துணவு மையத்தில் இருந்த அனைத்து முட்டைகளும் இதுபோல நேற்று கொடுக்கப்பட்டு விட்டது. நாமக்கல் மாவட்டம் முழுவதும் பல்வேறு பள்ளிகளில் மாணவ, மாணவியர் நேரில் வரவழைக்கப்பட்டு, அவர்களுக்கு சத்துணவு முட்டையை அமைப்பாளர்கள் வழங்கியுள்ளதாக தலைமை ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

Tags : corona panic closure ,
× RELATED கிசான் திட்ட மோசடியை போன்றே அம்மா ஸ்கூட்டர் வழங்கியதிலும் மெகா ஊழல்