×

வெள்ளாற்றின் குறுக்கே தடுப்புசுவர் கட்ட வேண்டும்

புவனகிரி, மார்ச் 20: தமிழக சட்டப்பேரவையில் நடந்து வரும் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில்  பங்கேற்று புவனகிரி தொகுதி திமுகஎம்எல்ஏ துரை.கி. சரவணன் பேசியதாவது: விருத்தாசலம் முதல் பரங்கிப்பேட்டை வரை உள்ள மாநில நெடுஞ்சாலை அதிவிரைவு சாலையாக தரம் உயர்த்தப்பட உலக வங்கி நிதியுதவியுடன் ரூ.162 கோடியில் பணிகள் துவங்கப்பட்டது ஆனால் 2018ம் ஆண்டு முடிக்கப்பட வேண்டிய இந்த பணிகளை, ஒப்பந்ததாரர் சரியாக செய்யாததால் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.  கடந்த 2 ஆண்டுகளாக மறு ஒப்பந்தம் கோரியும் இதுவரை அரசு அலட்சியம் காட்டி வருகிறது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுவதுடன் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே, இந்த சாலைப் பணிகளை விரைவாக முடித்து தர வேண்டும்.  அதுபோல் புவனகிரி வழியாக ஓடும் வெள்ளாறு பரங்கிப்பேட்டை அருகே சென்று கடலில் கலக்கிறது. சுமார் 20 ஆண்டுகளாக கடல் நீர் ஆற்றில் உட்புகுவதால் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் உப்பாக மாறிவிட்டது விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் வெள்ளாற்றின் குறுக்கே ரூ.90 கோடியில் தடுப்பணை கட்ட வேண்டும் என கோரிக்கை வைத்து, அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்காக உலக வங்கி ரூ.57 கோடி நிதி உதவி வழங்க ஒப்புதல் அளித்துள்ள நிலையில், நிலம் கையகப்படுத்த தமிழக அரசு ரூ.37 கோடி நிதி அளித்து தடுப்பணை கட்டும் பணியை விரைவாக தொடங்க வேண்டும்.விவசாயிகள் குறித்த நேரத்தில் சாகுபடியை துவக்குவதற்கு மின் இணைப்புக்காக பல ஆண்டு களாக காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு உடனடி மின் இணைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு எம்எல்ஏ பேசினார்.


Tags :
× RELATED தரங்கம்பாடி அருகே கரையை பலப்படுத்த...