திருட்டு, வழிப்பறி வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறல்

விழுப்புரம், மார்ச் 20:  விழுப்புரம் காவல் உட்கோட்டத்தில் நடக்கும் திருட்டு, வழிப்பறி வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த காலங்களைவிட சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருந்தாலும், அவ்வப்போது திருட்டு, வழிப்பறி சம்பவங்களுக்கு பஞ்சமில்லாத நிலை உள்ளது. கத்தியால்வெட்டி பணம்பறித்து வழிப்பறியில் ஈடுபடுவது, வீடு புகுந்து உரிமையாளர்களை தாக்கி பணம், நகைகளை கொள்ளையடிப்பது போன்ற சம்பவங்கள் சமீபகாலமாக அரங்கேறி வருகின்றன. கொலை வழக்கில் விரைந்து குற்றவாளிகளை கைது செய்யும் காவல்துறையினர், திருட்டு, வழிப்பறி வழக்குகளில் திணறிவருகின்றனர். இதற்கான தனிகுற்றப்பிரிவு ஏற்படுத்தியபோதும் பலனில்லாத நிலையில் உள்ளது. கடந்த சிலமாதங்களில் நடந்த திருட்டு, வழிப்பறி வழக்குகளில் குற்றவாளிகளை பிடிக்கமுடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். விழுப்புரம் காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட வளவனூர் காவல்சரகத்திற்குட்பட்ட கொங்கம்பட்டில் தனியார் கம்பெனி ஊழியரை இரும்பு கம்பியால் தாக்கி விட்டு 15 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். டவுசர் அணிந்து வந்த கொள்ளையர்கள் இச்சம்பவத்தை அரங்கேற்றி விட்டுச்சென்றனர்.

இதேபோல் தாலுகா காவல்நிலையத்திற்குட்பட்ட பகுதியான, திருவெண்ணெய்நல்லூரில் நகை அடகு கடை வைத்து நடத்தி வரும் ஒருவர் இரவு வட்டிப்பணம் ரூ.3 லட்சத்தை எடுத்துவரும்போது எல்லீஸ்சத்திரம் என்ற இடத்தில் கொள்ளையர்கள் கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு பணத்தை பறித்துச் சென்றனர். ரத்தவெள்ளத்தில் கிடந்த அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதேபோல், காணை காவல்நிலையத்திற்குட்பட்ட கருங்காலிப்பட்டைச் சேர்ந்த பாலாஜி என்ற விவசாயி வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே சென்ற நான்கு கொள்ளையர்கள் ரூ.12 லட்சம் மதிப்பிலான நகை, வெள்ளி, டிவி உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச்சென்றனர். கொள்ளையர்களை விரட்டிபிடிக்கச்சென்ற ராஜேந்திரன் என்பவரையும் இரும்பு கம்பியால் தாக்கிவிட்டுச்சென்றுள்ளனர்.

இப்படி வாரத்திற்கு ஒரு திருட்டு, வழிப்பறிசம்பவங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இதனால் மக்கள் பீதியில் உள்ள நிலையில் திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். நகை அடகுக்கடைக்காரர் வழிப்பறி சம்பவத்தில் தனிப்படை அமைக்கப்பட்டதாக எஸ்பி தெரிவித்தார். இருந்தபோதும் கொள்ளையர்களை பிடித்தபாடில்லை. திருட்டு, வழிபறி போன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களை பிடிக்க காவல்நிலையம், காவல்உட்கோட்ட அளவில் குற்றப்பிரிவு அமைக்கப்பட்டு செயல்பட்டுவருகிறது. இவ்வளவு, திருட்டு, வழிப்பறி சம்பவம் நடந்தும் ஒருவழக்கில் கூட போலீசார் குற்றவாளிகளை கைதுசெய்து, உடமைகளை மீட்கவில்லை என பொதுமக்கள் ஆதங்கப்படுகின்றனர். குற்றப்பிரிவு போலீஸ் செயலிழந்து விட்டதா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். எனவே, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இதில் உரிய கவனம் செலுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Related Stories:

>