தலைமறைவாக இருந்த கொலை குற்றவாளி கைது

வானூர், மார்ச் 20:  ஆரோவில் அருகே தலைமறைவாக இருந்து வந்த கொலை வழக்கு குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். ஆரோவில் காவல்நிலையத்துக்குட்பட்ட நாவற்குளம் பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவருக்கும் புதுச்சேரி கிருஷ்ணா நகரை சேர்ந்த தம்பு (எ) கார்த்திக் என்பவருக்குமிடையே ரியல் எஸ்டேட் தொழிலில் பணப்பிரச்னை இருந்து வந்தது. இதையடுத்து ஏழுமலையுடன் இருந்து வந்த திருநாவுக்கரசு, செல்வம் ஆகிய 2 பேரையும் தம்பு (எ) கார்த்திக் கூட்டாளிகளுடன் சேர்ந்து கடந்த 2003ம் ஆண்டு கொலை செய்தான். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 19 பேர் மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு திண்டிவனம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 2012ல் தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் தம்பு (எ) கார்த்திக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததன் பேரில் அங்கும் சிறை தண்டனை உறுதியானது. இதையடுத்து தம்பு (எ) கார்த்திக் தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வந்தார். அவரை பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி 29.11.2019ல் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவின் பேரில் கோட்டக்குப்பம் டிஎஸ்பி அஜய்தங்கம் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் நேற்று பொம்மையார்பாளையம் பகுதியில் உள்ள முந்திரி தோப்பில் பதுங்கியிருந்த தம்பு (எ) கார்த்திக்கை கைது செய்து திண்டிவனம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>