×

பொதுமக்களை சந்திப்பதை எம்எல்ஏக்கள் தவிர்க்க வேண்டும்

புதுச்சேரி, மார்ச் 20:  பொதுமக்களை சந்திப்பதை தவிர்க்குமாறு புதுச்சேரி எம்எல்ஏக்களை சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக புதுச்சேரி சட்டசபை செயலர் வின்சென்ட் ராயர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:- புதுச்சேரி சுகாதாரத்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை தந்த அறிவுறுத்தலின்படி இந்த சுற்றறிக்கை அனைவருக்கும் அனுப்பப்படுகிறது. கொரோனா கிருமி மிகுந்த ஆற்றலுடன் உடனே பரவக்கூடிய கிருமி என்பதாலும், இதனுடைய தாக்கம் சுமார் 170 உலக நாடுகளில் உணரப்பட்டு இருப்பதாலும், இதை கட்டுப்படுத்த சிறந்த வழி வீட்டுக்குள் இருப்பது மற்றும் மக்கள் அதிகமாக பொது இடங்களில் கூடுவதை தவிர்ப்பது போன்றவை ஆகும். எனவே அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், பொது வாழ்க்கையில் உள்ளோர் அனைவரும் அவசியமற்ற வகையில் பொதுமக்களை கூட்டுவதையோ அல்லது சந்திப்பதையோ தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
 மேலும் தங்கள் தொகுதி மக்களுக்கும் இந்த விபரத்தை முகநூல், வாட்ஸ்-அப், தொலைபேசி போன்ற ஊடகங்கள் மூலம் எடுத்துச் சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்தி பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்துமாறு கோரப்படுகிறார்கள். சட்டபேரவை தலைவர் அறிவுறுத்தலின்படி இச்சுற்றறிக்கை அனுப்பப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Tags : public ,
× RELATED மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை...