×

காற்றில் மின்வயர் அறுந்து விழுந்து பள்ளி மாணவன் சாவு

திருக்கனூர், மார்ச் 20: திருக்கனூரில் மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.திருக்கனூர் ராஜா நகரை சேர்ந்தவர் தெய்வசிகாமணி. இவர் கே.ஆர்.பாளையம் மெயின் ரோட்டில் டீக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு ரவி வர்மன் (17), இளஞ்செழியன் (16) என 2 மகன்கள் உள்ளனர். 2வது மகன் இளஞ்செழியன், திருக்கனூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.நேற்று காலை இவரது வீட்டிற்கு மின்சாரம் வராததால் மின்கம்பத்தின் அருகே சென்றிருக்கிறார். அப்போது, வீட்டிற்கு மின்இணைப்பு கொடுத்துள்ள வயர் காற்றின் காரணமாக அறுந்து இளஞ்செழியன் மீது விழுந்துள்ளது. இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் சுருண்டு விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மண்ணாடிப்பட்டு சமுதாய நலவழி மையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், வரும் வழியிலேயே இளஞ்செழியன் இறந்து விட்டதாக தெரிவித்தார்.தகவலறிந்த திருக்கனூர் போலீசார் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது தொடர்பாக அவரது தந்தை தெய்வசிகாமணி அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் குமார், உதவி சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தலிங்கம் ஆகியோர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
× RELATED இ-பாஸ் குழப்பத்தால் சென்னையில் விமான பயணிகள் வருகை சரிவு