அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் துணை சபாநாயகர் திடீர் ஆய்வு

புதுச்சேரி, மார்ச் 20: கர்ப்பிணிகளுக்கு தரமற்ற மாத்திரை வழங்கிய ரெட்டியார்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்ட துணை சபாநாயகர் எம்என்ஆர் பாலன் டாக்டர்கள் மற்றும் ஊழியர்களிடம் சரிமாரி கேள்வி எழுப்பினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி அரும்பார்த்தபுரம் பகுதியை சேர்ந்த சோமசுந்தரம் மனைவி துர்கா (28). கர்ப்பிணியான இவர் ரெட்டியார்பாளையம் கம்பன் நகரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக சென்றார். அங்கு அவருக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டது. வீட்டிற்கு வந்த அவர் மாத்திரையை பிரித்து பார்த்தபோது, அதில் பூஞ்சாணம் பிடித்திருந்தது. இதையடுத்து தொகுதி எம்எல்ஏவும் துணை சபாநாயகருமான எம்என்ஆர் பாலனிடம் முறையிட்டார். தொடர்ந்து பாலன் எம்எல்ஏ நேற்று காலை சம்பந்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, டாக்டர்கள் முன்னிலையில் சுகாதார நிலையத்தில் இருந்த மாத்திரைகளை பிரித்து பார்த்தார்.

அதில், அனைத்து மாத்திரைகளும் பூஞ்சாணம் பிடித்திருந்தது. 2019ம் ஆண்டு இந்த மாத்திரைகள் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், காலாவதி தேதி இன்னும் நிறைவடையாமல் உள்ளது. ஆனால் அவை முழுக்க பூஞ்சாணம் பிடித்த நிலையில் உள்ளன. கர்ப்பிணிகள் இதனை சாப்பிட்டால் பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்தும். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த துணை சபாநாயகர் பணியில் இருந்த டாக்டர்கள், ஊழியர்களிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

இதுகுறித்து முதல்வர் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த மாத்திரைகளை சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என கூறினார். மேலும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையத்திலும் மாத்திரைகளை ஆய்வு செய்து தரத்தை உறுதி செய்ய வலியுறுத்தினார்.இதையடுத்து அங்கிருந்த மருத்துவர்கள் பூஞ்சாணம் பிடித்த மாத்திரைகளை சுகாதாரத்துறைக்கு கொண்டு சென்றனர். துணை சபாநாயகர் திடீர் ஆய்வு காரணமாக ரெட்டியார்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: