அரசு உத்தரவை மீறி உடுமலையில் செயல்படும் டாஸ்மாக் பார்

உடுமலை, மார்ச் 20: அரசு உத்தரவை மீறி உடுமலையில் டாஸ்மாக் பார் செயல்பட்டு வருகிறது. கொரோனா  வைரஸ் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு பல்வேறு அறிவிப்புகளை  வெளியிட்டுள்ளது. வரும் 31ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை  விடப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள்,  தியேட்டர்கள், சுற்றுலா தலங்கள்,  பொழுதுபோக்கு தளங்கள், விளையாட்டு மைதானம் போன்றவற்றை மூட  உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அரசு அலுவலகங்களுக்கு வரவும் கட்டுப்பாடு  விதிக்கப்பட்டுள்ளது. புதிய நபர்களை பணியில் சேர்க்கவும் தடை  விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க டாஸ்மாக் பார்களையும் 31ம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி,  உடுமலையில் தியேட்டர்கள், சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன. ஆனால் உடுமலை  பசுபதி வீதியில் உள்ள டாஸ்மாக் கடையில் பார் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்த  பாருக்கு செல்ல இரு வழித்தடங்கள் உள்ளன. இதில் ஒரு வழித்தடத்தை மட்டும்  மூடிவிட்டு, மற்றொரு வழித்தடத்தை திறந்து வைத்து திருட்டுத்தனமாக பார்  நடந்து வருகிறது. காலை 5 மணிக்கே பார் செயல்படுகிறது. இங்கு மது விற்பனை  தடையின்றி நடக்கிறது. குடிமகன்களும் அதிகளவில் வருகின்றனர். மேலும் ரூ.105க்கு விற்ற குவார்ட்டர் மது பாட்டில் ரூ.170-க்கு விற்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட  அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

Related Stories:

>