×

50 கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு

தாராபுரம்.மார்ச் 20: தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தொப்பம்பட்டி  ஊராட்சியின் தலைவர், கவுன்சிலர்கள் கலந்து கொண்ட அவசரக் கூட்டம் மடத்து  பாளையம் ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சித் தலைவர் லட்சுமி தலைமையில் ஊராட்சி  ஒன்றிய மண்டல  துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பெரியசாமி முன்னிலையில்  நடைபெற்றது.கூட்டத்தில் தாராபுரம் அமராவதி ஆற்றில்  இருந்து சுண்ணாம்பு காடு கூட்டு குடிநீர் திட்டம் மூலம் உடுமலை தாலுகா  பூளவாடி கிராமம் வரை கொண்டு செல்லப்படும் 30 ஆண்டுகளை கடந்த குடிநீர் திட்ட  குழாயில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி தற்போது  முற்றிலுமாக குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுவிட்டது.இக்கூட்டு  குடிநீர் திட்டத்தின் குடிநீரை நம்பி 15க்கும் மேற்பட்ட ஊராட்சிகளும்  அதனைச் சார்ந்த 50க்கும் மேற்பட்ட கிராமங்களும் அதில் வாழும் பொது மக்களும், கால்நடைகளும் உள்ளனர்.மாற்று ஏற்பாடாக அரசு செய்து தந்த ஆழ்குழாய்  கிணறுகளும் அதில் பொருத்தப்பட்ட மின் மோட்டார்களும், பல ஆண்டுகளுக்கு முன்பே  பழுதடைந்து விட்டன. எனவே புதிய ஆழ்குழாய் கிணறுகளை அமைத்து, மின்  மோட்டார்களை சரி செய்து சுண்ணாம்பு காடு கூட்டு குடிநீர் திட்டத்திற்காக  புதிய குழாய்களை பதித்து குடிநீரை வழங்க வேண்டும் என கவுன்சிலர்கள் மன்றத்தில் கோரிக்கையை முன் மொழிந்தனர்.இந்நிலையில் ஊராட்சி கவுன்சிலர்களின் கூட்டத்தை பார்வையிட வந்த  பொதுமக்களில் பலர் தங்களுக்கு வழக்கம்போல சுண்ணாம்பு காடு கூட்டு குடிநீர்  திட்டம் மூலம் தங்கு தடையற்ற குடிநீரை வழங்க வேண்டுமென்றும் ஏற்கனவே  அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணறுகளை அதில் உள்ள மின் மோட்டார்களை சரி  செய்வதுடன் புதிய ஆழ்குழாய் கிணறுகளை அமைத்து சீரான குடிநீரை 50  கிராமங்களுக்கும் வழங்காவிட்டால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்துவதைத்  தவிர வேறு வழி இல்லை என தெரிவித்தனர்.இதைத்தொடர்ந்து தமிழக அரசும், மாவட்ட  நிர்வாகமும் புதிதாக அமைக்கப்பட்ட கிராம ஊராட்சிகளுக்கு அதன் திட்டப்  பணிகளுக்கான நிதியை விரைவாக ஒதுக்கி குடிநீர் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்  என கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags : villages ,
× RELATED லாரியை வழிமறித்து கரும்பு ருசித்த காட்டு யானை