×

செல்போன் கடை உரிமையாளரை ஓட ஓட விரட்டி அரிவாள் வெட்டு


திருப்பூர், மார்ச் 20: திருப்பூரில் செல்போன் கடை உரிமையாளரை இரு சக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் கோபால் பட்டேல் (35). இவர் தனது அண்ணன் செபரான் பட்டேலுடன் சேர்ந்து திருப்பூர் பாண்டியன்நகரில் செல்போன் கடை வைத்துள்ளார். கடந்த 16ம் தேதி இரவு வழக்கம்போல கடையை பூட்டி விட்டு அண்ணன்- தம்பி 2 பேரும் வீட்டிற்கு புறப்பட்டனர். செல்லும் வழியில் கருப்பராயன் கோவில் வீதியில் உள்ள ஒரு மளிகை கடை அருகே கோபால் பட்டேல் மற்றும் செபரான் பட்டேல் இருவரும் நின்று பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த இருவர் அரிவாளினால் சகோதர்களை வெட்ட முயன்றனர். செபரான் பட்டேல் தப்பி ஓடிவிடவே, கோபால் பட்டேலை ஓட, ஓட விரட்டி வெட்டினார்கள். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தகவலறிந்த திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்ததோடு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் சம்பவம் நடந்த இடத்தின் அருகில் உள்ள மளிகை கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை கைப்பற்றி, அரிவாள் வெட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகள் 2 பேரையும் தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED வேலூர் அருகே போலீஸ்காரர் மீது...