×

கொரோனா வைரஸ் பீதி சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடியது

உடுமலை, மார்ச்20: திருப்பூர் மாவட்டத்தில் சுற்றுலாத்தலங்கள் கொரோனா வைரஸ் தொற்று பீதி காரணமாக மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக நடைபாதை வியாபாரிகள் வியாபாரம் இன்றி விரக்தி அடைந்துள்ளனர்.திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி மலை, பஞ்சலிங்க அருவி, அமணலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. இதேபோல் அமராவதி அணை அருகே அமராவதி அணை பூங்கா முதலைப்பண்ணை ஆகிய சுற்றுலாத் தலங்கள் உள்ளன. மாவட்டம் முழுவதிலும் இருந்து வார விடுமுறை, அரசு விடுமுறை, தேர்வுகால விடுமுறையின்போது பொதுமக்கள் குழந்தைகளுடன் சுற்றுலாத்தலத்திற்கு வருகை புரிவது வழக்கம்.தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் சுற்றுலாத்தலங்கள், திரையரங்குகள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி கூடங்கள், வணிக வளாகங்கள் வரும் 31ம் தேதி வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அமராவதி அணை பூங்கா முதலைப்பண்ணை திருமூர்த்தி அணையின் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள நீச்சல் குளம் பஞ்சலிங்க அருவி ஆகியன மூடப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தாலும் அரசு உத்தரவிற்கிணங்க பொதுமக்கள் மாணவ-மாணவிகள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராததால் சாலைகள் வெறிச்சோடி இருக்கின்றன. பேருந்துகளும் பயணிகள் கூட்டம் இன்றி இயக்கப்பட்டு வருகின்றன. திருமூர்த்தி மலை மீது உள்ள பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அமணலிங்கேஸ்வரர் கோயில் பக்தர்கள் வருகை இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இந்து அறநிலைத்துறை சார்பில் நாள்தோறும் வழங்கப்படும் அன்னதானத்தை சாப்பிடுவதற்கு கூட பக்தர்கள் வராத நிலை ஏற்பட்டுள்ளது. அமணலிங்கேஸ்வரர் கோயில் வளாகத்தில் கடை வைத்துள்ள வியாபாரிகள் சுற்றுலாப்பயணிகள் வருகை இல்லாததால் வியாபாரம் முழுமையாக பாதிக்கப்பட்ட தங்கள் வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்துள்ளனர். மலைவாழ் மக்கள் சுய உதவிக்குழுவினர் பஞ்சலிங்க அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் பஞ்சுமிட்டாய், இலந்தபழம், வடுமாங்காய், கலாக்காய், அன்னாசி பழம், நீர் மோர், சர்பத், ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பான வகைகள், வடை போண்டா பஜ்ஜி உள்ளிட்ட தின்பண்டங்களை விற்பனை செய்து வந்தனர். கடந்த 4 நாட்களாக திருமூர்த்திமலை, அமணலிங்கேஸ்வரர் கோயில், பஞ்சலிங்க அருவிக்கு சுற்றுலா பயணிகள் வரத்து அடியோடு பாதிக்கப்பட்டுள்ளதால் சாலையோர கடை உரிமையாளர்கள் நடைபாதை வியாபாரிகள், உணவகங்கள், பேக்கரி, டீக்கடை, பெட்டிக்கடை வியாபாரிகள் அனைவரும் மிகுந்த மனவேதனைக்கு உள்ளாகியுள்ளனர். இம்மாத இறுதி வரை இதே நிலை நீடித்தால் வட்டிக்கு கடன் வாங்கி கடை நடத்தும் தங்களைப் போன்ற வியாபாரிகளின் நிலை தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என குமுறுகின்றனர். கொரோனா வைரஸ் உலக பொருளாதாரத்தை மட்டுமல்ல உள்ளூர் பொருளாதாரத்தையும் சீர்குலைத்து உள்ளது என்பது நிதர்சனமான உண்மை.

Tags : Coronavirus virus panic ,
× RELATED புகழ்பெற்ற பத்மநாபபுரம் அரண்மனை...