×

சாயக்கழிவு நீரை கொண்டு சென்ற லாரி பறிமுதல்

திருப்பூர், மார்ச் 20: திருப்பூரில் சாயபட்டறையிலிருந்து சாயக்கழிவு நீரை கொண்டு சென்ற லாரியை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருப்பூரில் பிரதான தொழிலாளாக பின்னலாடை தொழில் இயங்கி வருகிறது. இது மட்டுமல்லாமல் பின்னலாடை தொழிலை சார்ந்த தொழில்களான பிரிண்டிங், டையிங், வாஷிங் உள்ளிட்ட தொழில்களும் நடைபெற்று வருகிறது. இந்த தொழில்களில் ஏராளமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றார்கள். இவை அனைத்தும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் அனுமதி பெற்றுத்தான் இயங்க வேண்டும். அனுமதியின்றியும், முறைகேடாகவும் செயல்பட்டு வரும் சாய, சலவை ஆலைகள் மீது மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் கூலிபாளையம் நால் ரோட்டில் இருந்து வாவிபாளையம் ரிங்ரோடு செல்லும் வழியில் உள்ள வாய்க்காலில் நேற்று முன்தினம் சாயக்கழிவுநீர் சென்று கொண்டிருந்தது. இதனை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் பாரதிராஜா மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதன் அருகே ஒரு லாரி நின்று கொண்டிருந்தது. அந்த லாரியை ஆய்வு செய்த போது, அதில் சாயக்கழிவுநீர் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து லாரியை பறிமுதல் செய்து, அதன் டிரைவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Larry ,
× RELATED சரக்கு வாகனத்தில் தீ