×

கலெக்டர் அலுவலகத்தில் மக்களின் வசதிக்காக இருக்கைகள் அமைப்பு

கோவை, மார்ச் 20: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்களின் வசதிக்காக நுழைவு வாயிலில் உள்ள வளாகத்தில் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நாள்தோறும் பல்வேறு பகுதியிலிருந்து பொதுமக்கள் மற்றும் வயதானவர்கள் மாற்றுத்திறனாளிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வருகின்றனர். குறிப்பாக வாரம்தோறும் நடைபெறும் குறைதீர் முகாம் நாளன்று ஏராளமான பொதுமக்கள் பல்வேறு துறை தொடர்பான மனுக்களுடன்  வந்து  மனு அளித்து வருகிறார்கள். அதுதவிர அளிக்கப்பட்ட மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை சந்திப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் வருகிறார்கள்.  ஆனால் சம்பந்தப்பட்ட துறை அலுவலர் சந்தித்திப்பதற்காக  நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளதாலும் போதிய இருக்கை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் வயதானவர்களும் சிரமப்பட்டு வந்தனர்.இதனை அடுத்து  மக்களின் வசதிக்காக அலுவலக நுழைவு வாயிலில் உள்ள வராண்டாவில் பத்துக்கும் மேற்பட்ட இருக்கைகள் போடப்பட்டுள்ளன. மேலும் இருக்கையில் காத்திருப்பவர்களுக்கு பெரிய அளவிலான தொலைக்காட்சிப் பெட்டியும் அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர ஊரக வளர்ச்சி, மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகம் முன்பும் கூடுதல் இருக்கைகள் போடப்பட்டுள்ளது. இது குறித்து கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு செயலாளர் லோகு கூறுகையில், ‘‘கடந்த வாரம் மாவட்ட கலெக்டருக்கு இருக்கைகள் அமைக்கப்படுவது தொடர்பாக மனு அளிக்கப்பட்டது.  இதனிடையே பொதுமக்கள் நலன் கருதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருக்கை வசதி அமைக்கப்பட்டுள்ளது. இது மிகவும் வரவேற்கத்தக்கது’’ என்றார்.

Tags : office ,Collector ,
× RELATED பாதை வசதிக்கேட்டு மயானத்தில் காத்திருப்பு போராட்டம்