திருப்பூர் 2வது மண்டலத்தில் 15 கடைகளை உடனடியாக மூட மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவு

திருப்பூர், மார்ச் 20: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சினிமா தியேட்டர்கள், டிபார்ட்மென்டல் ஸ்டோர் உள்பட பொதுமக்கள் அதிகம் கூடும் வணிக நிறுவனங்களை வருகிற 31ம் தேதி வரை மூடுமாறு மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். ஆனாலும், பல இடங்களில் மக்கள் அதிக அளவில் கூடும் டிபார்ட்மென்டல் ஸ்டோர்கள் செயல்பட்டு வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, மாநகராட்சி கமிஷனர் சிவக்குமார் உத்தரவின் பேரில் பொதுமக்கள் அதிகமாக கூடும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களை நேற்று 2வது மண்டல உதவி கமிஷனர் செல்வநாயகம் தலைமையில் சுகாதார அலுவலர் ராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது திருப்பூர் பி.என்.ரோட்டில் போயம்பாளையம் முதல் புஷ்பா சந்திப்பு வரை பொதுமக்கள் அதிகமாக கூடும் வகையிலும், ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருந்த பல்பொருள் அங்காடி, ஜவுளி நிறுவனங்கள், செல்போன் கடைகள் உள்பட 15 கடைகளை உடனடியாக மூடுவதற்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர். மேலும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அந்த கடைகளின் முன்பகுதியில் அறிவிப்பும் ஒட்டப்பட்டது. அதில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக வருகிற 31ம் தேதி வரை தற்காலிகமாக மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட கடைகளில் பணியில் இருந்த ஊழியர்கள் அனைவருக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு, வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.

Related Stories: