×

சோதனை சாவடிகளில் தீவிர வாகன சோதனை பிற மாநில வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு

ஈரோடு, மார்ச் 20:  ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பினை தடுக்க மாநில எல்லைப்பகுதியில் உள்ள 2 சோதனை சாவடி உட்பட 13 சோதனை சாவடிகளிலும் சுகாதாரத்துறை அலுவலர்களுடன் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பிற மாநில வாகனங்கள் மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுவதில்லை.இதுகுறித்து எஸ்பி சக்திகணேசன் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கர்நாடகா மாநில எல்லைப்பகுதியில் ஆசனூர் சோதனை சாவடி, பர்கூர் மலைப்பகுதியில் உள்ள சோதனை சாவடி மற்றும் மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் உள்ள 11 சோதனை சாவடிகளிலும் 24 மணி நேரமும் சுகாதார துறை அதிகாரிகளுடன், போலீசார் இணைந்து வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பிற மாநிலத்தில் இருந்து ஈரோடு மாவட்டத்திற்குள் வரும் வாகனங்களுக்கு சுகாதாரத்துறையினர் கிருமிநாசினிகளை தெளித்து, வாகனங்களில் உள்ளவர்களுக்கு கொரோனா அறிகுறி உள்ளதா? என பரிசோதிக்கின்றனர். வாகனங்களில் உள்ளவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள், எதற்காக மாவட்டத்திற்குள் வருகிறார்கள் என விசாரணை நடத்திய பிறகே போலீசார் உள்ளே அனுமதிக்கின்றனர்.

அதேசமயம், ஈரோடு மாவட்டத்திற்குள் மாநில எல்லைப்பகுதியில் இருந்து வரும் பிற மாநில வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. அதிலும், அந்த வாகனங்களில் வருபவர்கள், மாவட்டத்திற்குள் வருவதற்கு உரிய காரணம் தெரிவித்தால், அது தவிர்க்க முடியாததாக இருந்தால் அந்த வாகனத்தை மட்டும் உரிய சோதனைக்கு பிறகே உள்ளே வர அனுமதிக்கிறோம்.கொரோனாவை தடுக்க அனைத்து கோயில்கள் திருவிழாக்கள், கும்பாபிஷேகங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஜவுளிக்கடைகள், நகைகக்கடைகள், வணிக நிறுவனங்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. போராட்டம், ஆர்ப்பாட்டம் போன்றவற்றை ஒத்திவைக்கவும் காவல்துறை சார்பில் கேட்டுக்கொண்டுள்ளோம். அதேபோல், ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும் கைகளை சுத்தம் செய்ய, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்கவும், போலீசார் தங்களை தற்காத்துக்கொள்ளவும் மாஸ்க், கிளவுஸ் பயன்படுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags : vehicle testing ,checkpoints ,
× RELATED தேர்தல் தொடர்பான வாகன தணிக்கை செய்ய...