×

ஈரானில் சிக்கியுள்ள 721 தமிழக மீனவர்களை கப்பலில் அழைத்து வர திட்டம்

நாகர்கோவில், மார்ச் 20: கொரோனா அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள ஈரானில் உள்ள குமரி மாவட்ட மீனவர்களை இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பலில் சென்று மீட்டுவர மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
உலகம் முழுவதும் உள்ள கொரோனா வைரஸ் பாதிப்பால் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் ஈரானில் சிக்கி அங்கிருந்து வெளியேற முடியாமல் தவிக்கின்றனர். இதில் சுமார் 721 தமிழக மீனவர்கள் கீஷ், கங்கன், லவான், மொகம், சேறோ, சிருயேஹ், புஷ்கர், சாரக், அல்சூர் போன்ற பகுதிகளில் உள்ளனர். இதில் 600க்கும் மேற்பட்டவர்கள் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர். மற்றவர்கள் நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், நாகை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களை உடனடியாக மீட்டு தாயகம் கொண்டு வரவேண்டுமென இவர்களது உறவினர்களும் பல்வேறு அமைப்பினரும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். தமிழக முதல்வர், மத்திய அமைச்சர்கள், பிரதமர் உள்ளிட்டோரையும் சந்தித்து மக்கள் பிரதிநிதிகள், பங்குதந்தையர்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர். ஆனால் இதுவரை இது தொடர்பான மேல் நடவடிக்கைகள் தாமதமாகவே இருந்து வருகிறது. ஈரானிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகள் இம்மீனவர்களுக்கு தேவையான மருத்துவ பரிசோதனை நடத்த தேவையான ஏற்பாடுகள் செய்ய தூதரகம் ஆயத்தமாகி வருகிறது என்று பதிலளித்திருந்தனர். ஆனால் இந்தியாவிலிருந்து ஈரான் சென்றுள்ள மருத்துவக்குழுவினர் போதுமான எண்ணிக்கையில் இல்லை என்பது தெரியவருகிறது. எனவே, போதிய அளவிலான மருத்துவக் குழுவை உடனடியாக ஈரானுக்கு அனுப்பி, மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு இந்தியர்களை போர்க்கால அடிப்படையில் மீட்டு தாயகம் கொண்டுவர வேண்டுமென மீனவர் அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

 நாட்கள் செல்லச்செல்ல தங்களுக்கு என்ன நடக்குமோ என்று மீனவர்கள் பீதியுடன் உள்ளனர். ஈரானில் சிக்கித்தவிக்கும் இந்திய மீனவர்களை எந்தவொரு அதிகாரியும் சந்தித்து ஆறுதல் கூறவோ அல்லது உணவு, குடி தண்ணீர் போன்ற அத்தியாவசியத் தேவைகளை செய்து கொடுக்கவோ இதுவரையும் முன்வரவில்லை. மேலும் மீனவர்களை பார்க்க மார்ச் 16ம் தேதி வருவதாக தெரிவித்த தூதரக அதிகாரிகள், கடைசி நேரத்தில் தங்களது வருகையை மாற்றியுள்ளனர்.
 ஒருபுறம் மீனவர்களின் முதலாளிகளின் மிரட்டல், மறுபுறம் போதிய உணவு தட்டுப்பாடு ஆகியவற்றால் வாடிக்கொண்டிருக்கும் மீனவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தூதரக அதிகாரிகளைக்கொண்டு செய்து கொடுக்கவும், உடனடியாக மருத்துவ பரிசோதனை நடத்தி மீனவர்களை தாய்நாட்டுக்கு அனுப்ப, சரியான தருணத்தில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
மீனவர்களுக்கு பாதிப்பு இல்லாததால் அவர்களை அழைத்து வருவதில் தாமதம் செய்வதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. அதே வேளையில் பாதிப்பு ஏற்படும் முன்னர் அவர்களை தாய்நாட்டிற்கு அழைத்து வரவேண்டும் என்று மீனவர் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. இதற்காக இன்று முதல் தொடர் போராட்டங்களுக்கும் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.  இதற்கிடையே ஈரானில் உள்ள மீனவர்களை மீட்டு வர இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பலை அனுப்பி வைக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாலும், பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வருவதாலும் விமானங்களில் அவர்களை அழைத்து வருவதில் சிக்கல் இருந்து வருகிறது. மேலும் விமானங்களில் அழைத்து வந்தால் பிற விமான நிலையங்களை கடந்து வரும்போது அழைத்து வருகின்றவர்களுக்கும் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கருதப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் இது தொடர்பாக ஓரிரு நாட்களில் அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : fishermen ,Tamil ,Iran ,
× RELATED தமிழக மீனவர்களைத் தாக்கிய சிங்களப்...