×

கொரோனா பரவலை தடுக்க அரசு விரைவு பேருந்துகள் இயக்கம் பாதியாக குறைப்பு

நாகர்கோவில், மார்ச் 20: கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக வெளியூர் செல்லும் அரசு விரைவு பேருந்துகள் இயக்கம் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளைமேற்கொண்டு வருகின்றன. கொரோனா பாதிப்பில் இந்தியா 2வது கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளதாக வந்துள்ள தகவலை அடுத்து தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரமடைந்துள்ளது. இதன்படி 3 பேருக்கு மேல் ஒரே இடத்தில் சேர்ந்து இருக்க வேண்டாம். 50 பேருக்கு மேல் வரும் கடைகள், வணிக நிறுவனங்கள் மூடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவையின்றி வெளியே செல்வதையும், வெளியூர் பயணங்களை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே அரசு விரைவு போக்குவரத்து கழகம் ஒற்றை வழித்தடத்தில் இயங்கும் பேருந்துகள் நீங்கலாக, முக்கிய நகரங்களுக்கு தொடர்ந்து இயக்கும் பேருந்துகளை பாதியாக குறைத்துள்ளது. இதன்படி நாகர்கோவிலிருந்து சென்னை செல்லும் பேருந்துகள் நேற்று முன்தினம் முதல் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையங்களில் பயணிகள் வருவதை பொறுத்து, பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. நாகர்கோவில் மண்டலம் சார்பில் திருவனந்தபுரத்திற்கு 42 பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இதில் 8 பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தற்போது 34 பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றது.

தொற்றா நோய் கஷாயம்
கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் புறநோயாளிகள் பிரிவிற்கு 3 வாயில்கள் இருந்தன. தற்போது இரு வாயில்கள் அடைக்கப்பட்டு, ஒரு வாயில் மட்டுமே திறக்கபட்டுள்ளது. இங்கு வருபவர்கள் கைகளை கழுவ வாஷ்பேசின் மற்றும் ஹேண்ட்வாஷ் வைக்கப்பட்டுள்ளது. மேலும் தொற்றா நோய் கஷாயம் வழங்கப்படுகிறது.

மருந்தாளுநர் சங்க தேர்தல் நிறுத்தம்
நாகர்கோவில் டென்னிசன் சாலையில் உள்ள அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் ஏராளமானவர்கள் குழுமி இருந்தனர். இதனை  அவ்வழியாக சென்ற மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் கண்டதும், எதற்காக கூட்டம் என விசாரித்தார். அப்போது, மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்க தேர்தல் நடைபெறுவதாக கூறினர். இதனையடுத்து, கொரோனா முன்னெச்சரிக்காக கூட்டங்கள், கலை நிகழ்ச்சிகள் நடத்தகூடாது. எனவே கலைந்து செல்லும்படி ஆணையர் சரவணக்குமார் கூறினார். இதனையடுத்து தேர்தலை ஒத்தி வைப்பதாக அறிவித்து விட்டு, அவர்கள் கலைந்து சென்றனர்.

தினசரி 450 பாட்டில் சானிட்டைசர் தயாரிப்பு
ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரியில் மருத்துவர்கள், ஊழியர்கள், மாணவ, மாணவியர்கள் எண்ணிக்கை மட்டும் 750ஐ தாண்டும். இதுதவிர உள்நோயாளிகள், புறநோயாளிகள், அவர்களின் உறவினர்கள் என குறைந்த பட்சம் 3 ஆயிரம் பேர் வரை வந்து செல்கின்றனர். இவர்களுக்கு தேவையான சானிட்டைசர் நேற்று முன்தினம் முதல் தயாரிக்கப்படுகிறது. நேற்று காலை 200 பாட்டில்களும், மதியம் 250 பாட்டில்களும் தாயரிக்கப்பட்டு கல்லூரி வருபவர்கள் மற்றும் மாணவ, மாணவியர் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது. இதன்படி கல்லூரி உள்ளே வரும்போது, சோப் மற்றும் தண்ணீரும், திரும்பி செல்லும்போது சானிட்டைசரும் கைகள் சுத்தம் செய்ய வழங்கப்படுகிறது.

மாநகராட்சி சார்பில் முகமூடிகள்
நாகர்கோவில் மாநகராட்சியில் மாநகர் நலப்பிரிவு சார்பில், மகளிர் சுய உதவிகுழுவினருக்கு பயிற்சி வழங்கப்பட்டு, அவர்கள் மூலம் தயாரிக்கப்பட்ட சானிட்டைசர் மற்றும் முகமூடிகளை (மாஸ்க்) நேற்று காலை ஆணையர் சரவணக்குமார், மாநகர் நல அலுவலர் கின்சால், பொறியாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது, லாபம் இன்றி குறைந்த விலையில், முகமூடி மற்றும் சானிட்டைசர் தயார் செய்து விற்பனைக்கு வைக்க ஆணையர் சரவணக்குமார் வலியுறுத்தினார். இன்று முதல் (வெள்ளிக் கிழமை) முதல் மாநராட்சி சார்பில், இவை விற்பனைக்கு வர உள்ளன.

தடிக்காரன்கோணம் வாலிபருக்கு கொரோனா பாதிப்பு இல்லை
தடிக்காரன்கோணம் பகுதியை சேர்ந்த 23 வயது வயது வாலிபர் சீனாவில் இருந்து வந்தார். அவருக்கு தொடர்ந்து இருமல் இருந்துள்ளது. இந்தநிலையில் பூதப்பாண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சை பெற்று வருவதை கண்டறிந்த சுகாதாரத்துறையினர் தனியார் மருத்துவமனையில் இருந்து அவரை மீட்டு அங்கிருந்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். பின்னர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வெளிநோயாளியாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்காமல் அவருக்கு கொரோனா அறிகுறிகள் இல்லை என்று கூறி பின்னர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

Tags : Government ,corona spread ,
× RELATED அரசு, தனியார் பஸ்கள் இயக்குவதால் இட...