×

திருவாரூர் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்

திருவாரூர், மார்ச் 20: திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிவரும் ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த மாதத்திற்கான ஊதியம் வழங்க கோரி நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் கலெக்டர் அலுவலக பின்புறத்தில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு திருவாரூர் மாவட்டம் மட்டுமின்றி நாகை மாவட்டத்தை சேர்ந்த நோயாளிகள் என ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வரும் நிலையில், தினந்தோறும் வெளி நோயாளிகளாக ஆயிரக்கணக்கானோரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள கொரனோ வைரஸ் நோய் தொற்று காரணமாக இந்த மருத்துவமனை முழுவதும் கடந்த ஒரு மாத்திற்கும் மேலாக தற்போது பெரும் பரபரப்பாகவே காணப்பட்டு வருகிறது.இந்நிலையில் இந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் ஒப்பந்த பணியாளர்களாக துப்புரவு பணி உட்பட பல்வேறு பணிகளில் 200க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு மாத ஊதியம் ரூ. 18 ஆயிரம் வழங்க வேண்டும், பணி பாதுகாப்பு அளிக்க வேண்டும், முக கவசம் ,கையுறை உட்பட அனைத்து உபகரணங்களையும் வழங்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது பிப்ரவரி மாதத்திற்கான ஊதியமும் நேற்று வரையில் வழங்கப்படாத நிலையில் இதனை கண்டித்தும், மாத ஊதியத்தை உடனே வழங்க கோரியும், தற்போது கொரனோ வைரஸ் போன்ற பயங்கர தொற்றுநோய் ஏற்ப்பட்டு வரும் நிலையில் தங்களுக்கான முககவசம், கையுறை உட்பட அனைத்து பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்க கோரியும் நேற்று இந்த ஒப்பந்த ஊழியர்கள் மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் வரையில் மருத்துவமனையின் பணிகள் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து மருத்துவ கல்லூரியின் கண்காணிப்பாளர் ராஜா போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது சிஐடியூ தொழிற்சங்க மாவட்ட செயலாளர் முருகையன், மாவட்ட தலைவர் மாலதி, துணை தலைவர் பழனிவேல் உட்பட பலரும் கலந்து கொண்டனர். இந்த நிலையில் மாத ஊதியம் குறித்து உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஊழியர்களின் பிற கோரிக்கைகளையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதன் பேரில் இந்த போராட்டம் கைவிடப்பட்டது.

Tags : Contract workers ,Thiruvarur Government Hospital ,
× RELATED ₹13 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற...