×

திருவண்ணாமலை மாவட்டத்தில் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக 22 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்ய இலக்கு

திருவண்ணாமலை, மார்ச் 20: வாகன விபத்துகளை தவிர்க்க, போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வட்டார போக்குவரத்து அலுவலர் தெரிவித்தார். கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக, வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஓட்டுநர் உரிமம் வழங்குதல், ஓட்டுநர் பழகுநர் உரிமம் வழங்குதல் போன்ற பணிகள் ேநற்று முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனால், திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று ஓட்டுநர் உரிமம் பெற வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். ஆனால், புதிய வாகனங்களை பதிவு செய்யும் பணி வழக்கம் போல நடந்தது. நேற்று ஒரே நாளில் மட்டும் 137 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டன. இந்த எண்ணிக்கையும் இனி வரும் நாட்களில் குறையும் என தெரிகிறது. இது தொடர்பாக, வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாச்சலம் தெரிவித்ததாவது: தமிழக அரசின் உத்தரவுபடி, கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக ஓட்டுநர் உரிமம் வழங்கும் பணி வரும் 31ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அலுவலகத்துக்கு வரும் நபர்களுக்கு, கொரோனா தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்.

ேமலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக 500 சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. இதுபோன்ற விபத்துகளுக்கு போக்குவரத்து விதிமீறல்கள் முக்கிய காரணமாகும். எனவே, போக்குவரத்து விதிமீறல்களை தடுத்து, விபத்துகளை தவிர்க்க தீவிர நடவடிக்கை எடுத்துள்ளோம். அதன்படி, போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் இணைந்து, தீவிர வாகன சோதனை நடத்த இருக்கிறோம். ஹெல்மெட் அணியாதது தொடர்பாக 13 ஆயிரம் வழக்குகள், ஷீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுதல் தொடர்பாக 6,600 வழக்குகள், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுதல் தொடர்பாக 2,750 வழக்குகளை இந்த மாத இறுதிக்குள் பதிவு செய்ய இலக்கு நிர்ணயித்திருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையையொட்டி மக்கள் அதிகம் கூடும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஓட்டுனர் உரிமம் வழங்கும் பணி நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் வெறிச்சோடி காணப்பட்ட திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகம்.

Tags : Target ,Thiruvannamalai district ,
× RELATED ''வெறித்தனம்''காட்டிய ராகுல், அகர்வால்...