×

கொரோனா வைரஸ் பீதியால் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய சாலைகள்

தஞ்சை, மார்ச் 19: கொரோனா வைரஸ் பீதியால் தஞ்சை மாவட்டத்தில் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. பயணிப்போரின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. கொரோனா வைரஸ் நோய் தொற்று என்பதால் உலகம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகளை அந்தந்த நாடுகள் மேற்கொண்டுள்ளன. இந்தியாவிலும் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மத்திய, மாநில அரசுகளின் அறிவுறுத்தல் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு விட்டன. தஞ்சை அரண்மனை, கலைக்கூடம், சரஸ்வதி மகால் நூலகம், பெரிய கோயில், மனோரா, கும்பகோணம் ஐராவதீஸ்வரர் கோயில், கல்லணை உட்பட சிறு சிறு சுற்றுலா இடங்களும் மூடப்பட்டுள்ளன. இதுதவிர சினிமா தியேட்டர்கள், மால்கள் மூடப்பட்டு விட்டன. மேலும் கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் பொதுமக்கள் அதிகளவில் கூடி வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவ, மாணவிகள் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். ஆசிரியர்கள், பேராசிரியர்கள் பணிக்கு சென்று வருகின்றனர். பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டப்படி வரும் 27ம் தேதி துவங்கவுள்ளது. தேர்வு நடைபெறும் நாள் மட்டும் தேர்வெழுதும் மாணவர்களை தேர்வு ஆரம்பிக்கும் நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக பள்ளிக்கு வருவதற்கு தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டுமென தஞ்சை மாவட்ட கல்வி அலுவலர் அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் சுற்றுலா தலங்களுக்கு செல்வதும் தற்போது தடைப்பட்டுள்ளதாலும், சினிமா தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளதால் பொழுதுபோக்குவதற்கு இடமின்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர். கொரோனா நோய் தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ள இந்நடவடிக்கையை ஏற்று தான் ஆக வேண்டுமென அரசு அலுவலர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதனால் காலை, மாலை நேரங்களில் தஞ்சை மாநகர் சாலைகளும், பேருந்து நிலையங்களிலும் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி கிடக்கிறது.

மேலும் கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்திலிருந்து இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் வரும் 31ம் தேதி நிறுத்தப்பட்டுள்ளது. புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்கு சனி, ஞாயிற்றுகிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் கோயில்களில் வெளியூர் பக்தர்களால் நடத்தப்படும் சிறப்பு வழிபாடு, பூஜைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. தஞ்சை, கும்பகோணம் ரயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ரயில்களின் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளதால் தஞ்சை ரயில் நிலையத்தில் முன்பைவிட கூட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது. இருப்பினும் ஒரு சில பயணிகள் மட்டுமே முககவசம் அணிந்தவாறு பயணித்தனர். தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கம் மூடப்பட்டுள்ளதால் மாணவர்களின் விளையாட்டு பயிற்சிகள் தடைப்பட்டன. மேலும் நடைபயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்களும் நடைபயிற்சி மேற்கொள்ள இயலவில்லை. இதனால் அவர்கள் தற்போது ஐடிஐ மைதானத்தில் காலை, மாலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொள்வதால் தற்போது ஐடிஐ மைதானத்தில் கூட்டம் அதிகளவில் உள்ளது.

Tags : Roads ,
× RELATED தமிழ்நாட்டில் உள்ள 5...