கொரோனா பரிசோதனை செய்ய சென்ற பெண் சுகாதார ஊழியர்கள் காயம்

காரைக்கால், மார்ச் 19: காரைக்காலில் கொரோனா பரிசோதனை செய்ய சென்ற இரு பெண் சுகாதார ஊழியர்கள் சாலை விபத்தில் காயம் அடைந்தனர். அவர்களை மருத்துவத்துறை கண்டுகொள்ளாததால், ஊழியர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். காரைக்கால் கோவில்பத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார உதவியாளராக பணியாற்றி வருபவர் நிஷா.  கிராமப்புற செவிலியராக பணியாற்றி வருபவர் துர்காதேவி. இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் வெளிநாட்டிலிருந்து வருகை தரும் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் உள்ளதா? என ஆய்வு செய்துவந்தனர்.

அப்போது காரைக்கால் பி.கே. சாலையில் அவர்கள் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தபோது, காரைக்கால்மேட்டை சேர்ந்த பிரகாஷ் என்பவர் ஓட்டி வந்த பைக் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், ஊழியர்கள் உள்ளிட்ட 3 பேரும் காயமடைந்தனர். பின்னர் 3 பேரும் ஆம்புலன்ஸ் மூலம் காரைக்கால் அரசு பொதுமருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அங்கு 3 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் நீண்ட நேரம் ஆகியும் மாவட்ட நலவழித்துறை சார்பில் யாரும் சென்று நலம் விசாரிக்கவும் இல்லை. கண்டுகொள்ளவும் இல்லை என கூறப்படுகிறது. இதனால் மிகுந்த சிரமத்திற்கு பிறகு ஊழியர்கள் மேல்சிகிச்சைக்கு சென்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: கூடுதல் வேலையாக கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு பணி பாதுகாப்பு தராவிட்டாலும் பரவாயில்லை. விபத்து ஏற்பட்டு மேல் சிகிச்சை தேவைப்படும் போது உதவாத நிலை கண்டிக்கத்தக்கது. இனி வரும் காலத்தில் இது போன்ற அலட்சியப்போக்கில் மாவட்ட நிர்வாகமும், நலவழித்துறையும் செயல்பாட்டால், ஊழியர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும். எனவே உரிய பாதுகாப்பு மற்றும் உதவிகளை செய்ய மாவட்ட நிர்வாகமும், நலவழித்துறையும் முன்வரவேண்டும் என்றனர்.

Related Stories: