×

புதிய பஸ்நிலையத்தில் ஓட்டுநர், நடத்துனர்களுக்கு முகக்கவசம்

புதுச்சேரி, மார்ச் 19:  உலகம் முழுவதும் ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ் வேகமாக பரவுகிறது. இந்தியாவிலும் இந்நோயின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. புதுச்சேரி மாநிலம் மாகேவில் மூதாட்டி ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பரவாமல் தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு முகக்கவசம், கை கழுவும் திரவம் வழங்கப்பட்டது. இதனை அமைச்சர் ஷாஜகான் வழங்கினார். நிகழ்ச்சியில் போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் மற்றும் பேருந்து உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  

தொடர்ந்து, அமைச்சர் ஷாஜகான் நிருபர்களிடம் கூறும்போது, கொரோனா வைரஸ் கோவிட்-19 உலகம் முழுவதும் பரவி வருகிறது. நடத்துநர்கள் டிக்கெட் வாங்குவது, பேருந்து கம்பிகளை பிடிப்பதன் மூலம் வைரஸ் பரவ வாய்ப்புள்ளது. அதனால், ஓட்டுநர், நடத்துநர் பாதுகாப்பாக இருக்க வேண்டும். முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும். கிருமி நாசினிகளை பயன்படுத்த வேண்டும். புதுச்சேரி மாநில பேருந்துகள் மட்டுமின்றி, தமிழகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து வரும் பேருந்துகளுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. கொரோனா வைரசில் இருந்து பொதுமக்கள் விழிப்புணர்வோடும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்றார்.

Tags : bus stand ,drivers ,conductors ,
× RELATED பழ விற்பனை நிலையமான திருவில்லி. பஸ் ஸ்டாண்ட்