×

ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பு அதிகரிப்பால் விலை கிடுகிடு உயர்வு

புதுக்கோட்டை, மார்ச்19: தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு காளைகளின் வளர்ப்பு அதிகரித்து விட்டதால் காளைகளின் விலை கிடு கிடு வென விலை உயர்ந்துவிட்டது. இதனால் அதிக விலைக்கு காளைகளை விற்பனை செய்து லாபமடைந்து வருகின்றனர். மேலும் காளைகளுக்கு பயன்படுத்தப்படும் கயிறுகள் விற்பனையும் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடைவிதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகு ஜல்லிக்கட்டு காளைகளை அதன் உரிமையாளர்கள் மாட்டிற்கு ரூ.10 ஆயிரத்திற்கும், ரூ.20 ஆயிரத்திற்கும் விற்பனை செய்தனர். இந்நிலையில் தமிழகத்தில் நடந்த போராட்டத்திற்கு பிறகு ஜல்லிக்கட்டு நடத்த சிறப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் கடந்த மூன்று ஆண்டுகளாக ஜல்லிக்கட்டுகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள மற்ற மாவட்டங்களை விட புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிக ஜல்லிக்கட்டுகள் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. முன்பெல்லாம் ஒரு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி என்றால் 500 காளைகள் கலந்துகொள்ளும். ஆனால் தற்போது ஆயிரம் காளைகளை தாண்டிவிட்டது. இதற்கு முக்கிய காரணம் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் அதிக அளவில் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பதுதான் காரணம் என்று ஜல்லிக்கட்டு காளை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரூ.30 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்ட காளைகள் தற்போது ரூ. ஒரு லட்சம் முதல் ரூ.ஒரு லட்சத்து 50 ஆயிரம் வரை விற்பனையாகி வருகிறது. முன்பெல்லாம் ஜல்லிக்கட்டு காளைகள் வாங்க வேண்டுமானால் ஜல்லிக்கட்டு நடைபெறும் மாதங்களுக்கு ஒரு சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தின் முக்கிய சந்தைகளுக்கு சென்று வாங்குவார்கள். தற்போது ஜல்லிக்கட்டு காளைகள் சந்தைக்கே செல்வதில்லை. தற்போது ஒவ்வொரு மாவட்டத்தில் சில தரகர்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு எந்த மாவட்டத்தில் எந்தமாதிரியான விலையில் காளை வளர்ப்போர்களுக்கு பிடித்தமாதிரி மாடுகள் இருப்பது குறித்த தகவல்களை தெரிவித்து வைத்திருக்கின்றனர். இவர்களிடம் தெரிவித்தால் இரண்டு நாட்களில் வாடிக்கையாளர்களுக்கு தேவையான காளைகளை வாங்கி கொடுத்துவிடுகின்றனர். ஒரு சிலர் அதிக விலை கொடுக்க முடியாததால் குறைந்த விலையில் சிறிய காளைகளை வாங்கி தினசரி பயிற்சி அளித்து அதனை தயார் செய்யும் பணியில் ஈபட்டுள்ளனர். பெரும்பாலோனோர் தங்கள் வளர்க்கும் காளையை விற்பனை செய்வதில்லை. ஒரு சிலர் நல்ல விலைக்கு வரும்போது காளைகளை விற்பனை செய்து விடுகின்றனர்.

இவர்கள் விற்பனை செய்துவிட்டு கிடைக்கும் பணத்தை கொண்டு குறைந்த விலையில் ஒரு காளையை வாங்கி அதனை நல்ல முறையில் ஜல்லிக்கட்டுக்கு தயார் படுத்தி இரண்டு, மூன்று ஜல்லிக்கட்டு அவிழ்த்து விட்டு பிறகு நல்ல விலைக்கு விற்பனை செய்து விடுகின்றனர். மேலும் தற்போது ஜல்லிக்கட்டு காளைகளின் விற்பனை அதிகரித்துள்ளதால் காளைகளுக்கு பயன்படுத்த வேண்டிய கழுத்து கயிறு, மூக்கனான் கயிறு, பிடி கயிறு, வரி கயிறு, நெத்தி கயிறு உள்ளிட்ட பல்வேறு கயிறுகள் விற்பனை அதிகரித்துள்ளது. காளை வளர்ப்போர்கள் தங்களின் வசதிக்கு ஏற்றவாறு விதவிதமான கயிறுகளை வாங்குகின்றனர். இதனால் காளைகளுக்கு தேவையான கயிறுகளின் விற்பனையும் அதிகரித்துள்ளது.

இது குறித்து ஜல்லிக்கட்டு காளையை வாங்கி விற்பனை செய்பவர்கள் கூறியதாவது: இந்த ஆண்டு தொடக்கத்தில் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. ஜல்லிக்கட்டு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் நடைபெறும். புதுக்கோட்டை மாவட்டத்தில் மற்ற மாவட்டங்களை ஒப்பிடும்போது அதிக அளவில் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கப்படுகிறது. மேலும் அதிக அளவில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. நகர் பகுதியில் உள்ளவர்கள், அரசு அலுவலர்கள், காவல் துறையில் பணியாற்றுவபர்கள் இடையே ஆர்வம் அதிகமானதால் அவர்களின் உறவினர்கள் மூலம் காளைகள் வாங்குவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனால் இவர்கள் நகர் பகுதியில் இருந்து கிராமங்களில் எங்கெங்கு காளைகள் இருக்கிறது. தரகர்கள் உதவியுடன் உரிமையாளர்களை அணுகி விலை பேசி விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டு ரூ.50 ஆயிரத்திற்கு விற்பனையான காளைகள் தற்போது ரூ.2 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது. காளைகளை வாங்க வருவோர்கள் அந்த காளையை பிடித்து விட்டால் என்ன விலை சொன்னாலும் மறுப்பு தெரிவிக்காமல் வாங்கி செல்கின்றனர். இதனால் தமிழகம் முழுவதும் தற்போது ஜல்லிக்கட்டு காளைகளின் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. தற்போது ஒரு காளை வீட்டில் நிற்கும் போது சில கயிறுகள் தேவைப்படும், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு செல்லும்போது சில வகையான கயிறுகள் தேவைப்படும். இதனால் ஒரு காளை புதிதாக வாங்கும்போது அதற்கு தேவையான கயிறுகளை ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ. 5 ஆயிரம் வரைக்கும் செலவு செய்து கயிறுகளை வாங்குகின்றனர். இதனால் காளைகளின் விற்பனை அதிகரிக்கும் அதேநேரத்தில் அதற்கு தேவையான கயிறுகளின் விற்பனையும் அதிகரித்துள்ளது என்றனர்.

Tags : Jallikattu bull farms ,
× RELATED ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பு அதிகரிப்பால் விலை கிடுகிடு உயர்வு