×

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு பஸ்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி மும்முரம்

அறந்தாங்கி, மார்ச்19: கொரொனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக அரசு பேருந்துகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. உலகம் முழுதும் கொடிய நோயான கொரொனா தீவிரமாக பரவி வருகிறது. சீனாவில் உருவான இந்த நோய் தற்போது உலகம் முழுதும் 8 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களின் உயிர்களை பறித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் இந்தியாவில் கொரொனா நோய் பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைக்கு அனைத்து அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள் துணையாக இருந்து வருகின்றன. இந்நிலையில் சாமானிய மக்கள் பயன்படுத்தும் அரசு பேருந்துகள் மூலம் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தினமும் பேருந்துகளை சுத்தம் செய்து, கிருமி நாசினி பரவாமல் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், பயணிகளும் கோரிக்கை விடுத்தனர்.

பொதுமக்களின் கோரிக்கை தினகரன் நாளிதழில் செய்தியாக வெளியானது. இதன் எதிரொலியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்ட புதுக்கோட்டை மண்டல பேருந்துகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நேற்று முதல் தொடங்கி, மும்முரமாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து கழக தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த மாவட்ட நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நிர்வாகத்திற்கும் பொதுமக்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

Tags : Government ,
× RELATED ‘அறிந்து கொள்ளுங்கள்’ கையேடு...