×

கொரோனா வைரஸ் தொடர்பான உத்தரவுகளை செயல்படுத்த குழு

புதுச்சேரி, மார்ச் 19: புதுச்சேரி கலெக்டர் அருண் நேற்று மாலை நிருபர்களுக்கு அளித்த பேட்டி: புதுச்சேரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் குறித்து தீவிர விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். ஆஷா மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் மூலமாக வீடு தோறும் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதுச்சேரிக்கு நுழையும் பகுதிகளான எல்லையில் இசிஆர், திண்டிவனம் சாலையில் ஸ்கிரீனிங் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மக்கள் அதிகம் கூடும் தியேட்டர்கள், பள்ளி, கல்லூரிகள், மால்கள், மியூசியம், போட்அவுஸ், ஆசிரமம் ஆகியவற்றை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதிக அளவில் மக்கள் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.  

நகராட்சி, கொம்யூன் மூலமாக தெரு தெருவாக கொரோனா குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படுகிறது. பள்ளி மற்றும் மருத்துவ மாணவர்களை கொண்டு வெளியூர்களில் இருந்து வரும் நபர்களிடம் விவரங்கள் சேகரிக்கப்படுகிறது. புதுச்சேரி வழுதாவூர் சாலையில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 1ம் தேதிக்கு பிறகு வெளிநாடு சென்று வந்தவர்கள், தங்களது விவரத்தை இங்கு பதிவு செய்ய வேண்டும். சுயவிவர பாரத்தை பெற்று நிரப்பி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இதேபோல், ஓட்டல்களிலும் சுயவிவர குறிப்பு பாரம் அளிக்கப்பட்டுள்ளது. ஓட்டலில் தங்க வருபவர்கள் அந்த பாரத்தை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும். அதன்பிறகு சுகாதாரத்துறை அனைத்து விவரங்களையும் சேகரித்து கண்
காணித்து உரிய நபர்களை பரிசோதிக்கும். \

தாசில்தார், நகராட்சி அதிகாரி, போலீஸ் அதிகாரி உள்ளடக்கிய ெசயலாக்க குழு புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொடர்பான உத்தரவுகளின் செயல்பாடு குறித்து இந்த குழு கண்காணிக்கும். புதுச்சேரி மாநிலத்தில் மாகேயில் மட்டும் ஒரே ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் பெற 104 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் மக்கள் தொடர்பு கொள்ளலாம். திருமண விழாக்களை பொறுத்தவரை குறைந்தபட்ச நபர்களை அழைக்குமாறு ஆலோசனை கூறியிருக்கிறோம். மக்கள் அதிகம் கூடும் கோயில்கள் மற்றும் கடற்கரை சாலையில் கொரோனா விழிப்புணர்வு பூத்கள் விரைவில் அமைக்கப்படும். கொரோனா குறித்து தீவிர விழிப்புணர்வு மக்களுக்கும் அவசியம் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

புதுச்சேரி அரசு பொது மருத்துவமனை மருத்துவ துறை தலைவர் டாக்டர் ரமேஷ் கூறும்போது, புதுச்சேரி எல்லைகளில் மருத்துவ மாணவர்கள் அடங்கிய குழுவினர் தற்போது பரிசோதித்து வருகிறார்கள். வெளிநாடுகளில் இருந்து வருபவர்களா? சென்று வந்தவர்களா? என்பது பற்றிய விவரங்களை சேகரிக்கும்  பணியில் ஈடுபட்டுள்ளனர். சமீபத்தில் சென்று வந்தவர்கள் என்றால் 2 வாரம் அவர்களை கண்காணிப்போம். 2 வாரத்திற்குப் பிறகு காய்ச்சல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் இருந்தால் மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்படும். இதற்காக மருத்துவமனைகளில் 12 வென்டிலேட்டர் வசதி செய்யப்பட்டுள்ளது.

அதுபோல் ஆயிரக்கணக்கானோரின் விவரங்களை சேகரித்து அதில் 33 பேரை அடையாளம் கண்டு பரிசோதித்தோம். இதில் 32 பேருக்கு கொரோனா இல்லை. ஏற்கனவே புதுச்சேரி எல்லையான இசிஆர், திண்டிவனம் சாலையில் நடத்தப்படுவது போல் விழுப்புரம், கடலூர் சாலை எல்லையிலும் ஸ்கிரீனிங் சோதனை இன்று முதல் நடத்தப்படும். மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் கொரோனா முன்எச்சரிக்கை ஆரம்பக்கட்ட தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக உள்ளது என்றார்.

Tags : Group ,Corona ,
× RELATED திருத்தப்பட்ட ஆண்டு திட்ட அட்டவணையை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி.