×

கொரோனா வைரஸ் எதிரொலி நாகையில் வெள்ளரிக்காய் விலை வீழ்ச்சி

நாகை, மார்ச்19:  கொரோனா வைரஸ் பாதிப்பால் நாகையில் சாகுபடி செய்த வெள்ளரிக்காய் வெளி மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். நாகை மாவட்டம் தெற்கு பொய்கைநல்லூர், வடக்கு பொய்கைநல்லூர், பரவை, பூவைத்தேடி, காமேஷ்வரம், விழுந்தமாவடி, வேட்டைகாரன் இருப்பு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் வெள்ளரி சாகுபடி செய்யப்படுகிறது. நான்கு மாத பயிரான இதற்கு பராமரிப்பு செலவு என்பது குறைவானது ஆகும். கடந்த பிப்ரவரி மாதம் பயிரியிட்டு தற்பொழுது மகசூல் தருகிறது. விவசாயிகள் வெள்ளரியை அறுவடை செய்து விற்பனை செய்யும் சீசன் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த காலகட்டத்தில் நாகை அருகே உள்ள பரவை சந்தையில் இருந்து வெள்ளரிக்காயை வாங்கி கோயம்பேடு, மன்னார்குடி, திருவாரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு எடுத்து சென்று அங்குள்ள உள்ள சந்தைகளில் விற்பனை செய்வார்கள். இதனால் நாகை மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் வெள்ளரிக்காய்களுக்கு எப்பொழுதும் நல்ல விலை கிடைக்கும்.

ஆனால் தற்போது நிலவும் கொரோனோ வைரஸ் காரணமாக இந்த இடங்களில் இருந்து வியாபாரிகள் வருகை குறைந்து விட்டது. இதனால் வெள்ளரிக்காய் பிற மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். கடந்த காலங்களில் ஒரு கிலோ ரூ.50 விற்பனை செய்யப்பட்ட வெள்ளரி காய்கள் தற்போது வெறும் ரூ.20 மட்டுமே விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். மேலும் நாகை மாவட்டத்தை சுற்றியுள்ள சுற்றுலா தலங்களுக்கும் சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக குறைந்ததால் உள்ளூர் வியாபாரிகளே வெள்ளரிக்காய் வாங்க அதிகம் வருவது இல்லை என்றும் தெரிவித்தனர். கொரோனா வைரஸ் காரணமாக வெள்ளரிக்காய் விற்பனையும் வீழ்ச்சி அடைந்திருப்பது வேதனை தருவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED பேனர் வைக்க முயன்றவர் மின்சாரம் தாக்கி சாவு