×

10க்கும் மேற்பட்டோர் பணிபுரியும் வணிக வளாகங்களை மூட உத்தரவு

கடலூர், மார்ச் 19: கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10க்கும் மேற்பட்டோர் பணிபுரியும் வணிக வளாகங்களை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஓட்டல், வியாபார ஸ்தலங்கள் உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் வியாபாரம் இன்றி முடக்கம் கண்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்தியாவில் இதன் தன்மை வேகமாக பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 31ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.

இதுபோன்று பெருநகரங்களில் தியேட்டர்கள், மால்கள், பார்கள் என அதிகளவில் மக்கள் கூடும் இடங்களுக்கு 31ம் தேதி வரை மூடியிருக்க அறிவுறுத்தியுள்ளது. மாவட்டங்களிலும் இதன் நிலைபாடு தொடர்கிறது. கடலூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் கொரோனா வைரஸ் தாக்கத்தை விரட்டியடிக்கும் பொருட்டு சுகாதாரப்பணிகள் நகராட்சி , பேரூராட்சி, ஊராட்சிகளில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுபோன்று பொதுமக்களும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்கிடையே பள்ளி, கல்லூரிகள் பெரும்பாலான மக்கள் கூடும் பொழுதுபோக்கு இடங்கள், தியேட்டர்கள் உள்ளிட்டவைகள் மூடப்பட்டுள்ளதால் மாவட்டத்தின் தலைநகரான கடலூர் வெறிச்சோடி காணப்படுகிறது. பேருந்துகள் இயக்கம் வெகுவாக குறைந்துள்ளது. முக்கிய மார்க்கெட் பகுதிகள் மஞ்சகுப்பம், திருப்பாதிரிப்புலியூர், முதுநகரில் காய்கறிகள் தேக்கம் கண்டுள்ளது. இதுபோன்று ஜவுளி, ஓட்டல் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களும் மக்கள் வருகை இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. நாளடைவில் பெரும்பாலான கடைகள் மூடப்படும் நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் கவலையுடன் தெரிவித்தனர். மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி கிடக்கிறது. சாலையோர சிறு வியாபாரிகள் இதனால் வியாபாரம் இன்றி வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

கடலூர் நகரில்  காய்கறியை பொறுத்தவரை சுமார் ரூ.20 முதல் 25 லட்சம் வரையும் , ஜவுளி, நகை மாளிகை உள்ளிட்ட அனைத்து வகை வணிகங்கள் பொறுத்தவரை ரூ.40 முதல் ரூ.50 கோடி வரையிலும் விற்பனை நடந்து வந்த நிலையில் இதில் 50 சதவீதத்துக்கும் மேல் குறைந்துள்ளதாக வணிகர் சங்கங்களின் நிர்வாகிகள் தெரிவித்தனர். வைரஸ் தாக்குதலின் நிலையை கட்டுப்படுத்தவும் மாவட்டத்தில் பரவாமல் இருக்கவும் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக இந்த நிலைப்பாடு ஏற்பட்டுள்ள நிலையிலும் மாவட்ட மக்களையும் வியாபாரிகளையும் அனைத்து தரப்பினரையும் வெகுவாக வாழ்வாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.இதற்கிடையே மாவட்ட நிர்வாகம் 10க்கும் மேற்பட்டோர் பணிபுரியும் வணிக தொடர்பான இடங்களை மூடியிருக்க அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் விடுத்துள்ள பத்திரிகை செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:கடலூர் மாவட்டத்தில், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க,  தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதல் மற்றும் அறிவுரையின்படி, கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.  கடலூர் மாவட்டத்தில் வைரஸ்நோய் பரவாமல் தடுக்க, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான கல்வி நிறுவனங்கள், பூங்காக்கள், திரையரங்குகள், மதுபானக்கூடங்கள், பிச்சாவரம் மற்றும் இதர சுற்றுலாதலங்கள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளன.

இதன் தொடர்ச்சியாக, பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் விதமாக உணவுப்பொருட்கள், காய்கறி, பால், மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்களைத் தவிர்த்து, 10 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரியும் பிற வணிக வளாகங்களை 31ம் தேதி வரை மூடிட, அனைத்து வணிகர்களையும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுரையாகவும், வேண்டுகோளாகவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Tags :
× RELATED விஜயதசமியில் மாணவர் சேர்க்கை: பள்ளி கல்வித்துறை உத்தரவு