×

ஈரானில் உள்ள மீனவர்களை மீட்க வலியுறுத்தி மார்ச் 20 முதல் வீடுகளில் கருப்புக்கொடி போராட்டம்

நாகர்கோவில், மார்ச் 19: ஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க வலியுறுத்தி வரும் மார்ச் 20ம் தேதி முதல் வீடுகளில் கருப்பு கொடி கட்டுவது என்று கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி மைய இயக்குநர் ஸ்டீபன் தெரிவித்தார்.
கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி மைய இயக்குநர் ஸ்டீபன் நாகர்கோவிலில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: உலகம் முழுவதும் அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் ஈரான் நாட்டில் வேகமாக பரவி வருவதால் அந்நாட்டில் சிக்கி தவிக்கும் 700க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை தாய் நாட்டிற்கு கொண்டு வருவதற்கு மார்ச் 2ம் தேதி பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களும் இணைந்து குமரி மாவட்ட கலெக்டரிடம் மனு வழங்கப்பட்டது. அதன் பிறகு அருட்தந்தையர்கள் இணைந்து தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் ஏற்பாட்டில் மார்ச் 6ம் தேதி  தமிழக முதலமைச்சரிடம் சென்று மனு அளிக்கப்பட்டது. அதன் பிறகு  மார்ச் 12ம் தேதி அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்களுடன் இணைந்து மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இணை அமைச்சர் முரளிதரன் ஆகியோரை நேரில் சந்தித்து மனு அளிக்கப்பட்டது. தமிழக அரசின் இந்த முயற்சிக்கு மீனவ மக்களின் பாராட்டை தெரிவித்துக்கொள்கிறோம்.

 ஆனால் இது வரையிலும் ஈரான் நாட்டில் சிக்கி தவிக்கும் தமிழக மீனவர்களுக்கு உணவோ அல்லது மீட்கும் எந்தவொரு நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்காத காரணத்தால் மார்ச் 17ம் தேதி அன்று குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கடற்கரை கிராமங்களில் உள்ள அருட்தந்தையர்கள் பங்குப்பேரவை நிர்வாகிகளும், பாதிக்கப்பட்ட மக்களும் இணைந்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இதில் ஈரான் நாட்டில் உள்ள தமிழக மீனவர்களை மீட்கும் வரை பல்வேறு வரையிலான போராட்டங்களை முன்னெடுத்து நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.  கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் பெருமளவில் கூடுகின்ற வகையில் உள்ள போராட்டங்களை தவிர்த்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றுதல், தொழில் முடக்கம் செய்தல் போன்றவற்றை செய்ய உள்ளோம். மீனவர்களை மீட்டுவருவது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து பேசியபோது அவர்கள் மீனவர்கள் இருக்கின்ற பகுதியில் நோய் பாதிப்பு ஏற்படவில்லை, நோய் கடுமையாக பரவியுள்ள இடங்களில் உள்ளவர்களை முன்னுரிமை அளித்து அழைத்து வந்தோம். இவர்களை நோய் பாதிப்பு ஏற்படும் முன்னர் அழைத்து வர வேண்டும் என்று வலியுறுத்தினோம். அப்போது இவர்களை அழைத்து வரும்போது நோய் பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக உள்ளோம் என்றார்கள். ஆனால் இதுவரையும் மீனவர்களை மீட்டுவர நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மீனவர்களை போர்கால அடிப்படையில் மீட்டு வரவேண்டும் என்பது எங்களது கோரிக்கை ஆகும். இது தொடர்பாக தமிழக அரசின் வலியுறுத்தல்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்று எண்ண வேண்டியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : protest ,homes ,
× RELATED திமுகவினர் ஆர்ப்பாட்டம்