×

கொரோனா தடுப்பு நடவடிக்கை எதிரொலி குமரி நீதிமன்றங்களில் 3 வாரத்துக்கு விசாரணைகள் நடைபெறாது

நாகர்கோவில், மார்ச் 19: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, குமரி மாவட்டத்தில் அனைத்து நீதிமன்றங்களிலும் அடுத்த மாதம் 9ம் தேதி வரை எந்த வித விசாரணையும் நடக்காது என அறிவிக்கப்பட்டு உள்ளது.  இது குறித்து குமரி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர்  ராஜேஷ், செயலாளர் ஜெயகுமார் ஆகியோர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனா தடுப்பு நடவடிக்கைககள் தீவிரமாகி வரும் நிலையில் சுகாதாரத்துறை, காவல்துறை, நீதித்துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள், நீதிபதிகள் நடத்திய ஆலோசனையின் பேரில் சென்னை உயர்நீதிமன்றம் அனைத்து கீழமை நீதிமன்றங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அந்த சுற்றறிக்கையை செயல்படுத்துவது தொடர்பாக குமரி மாவட்ட தலைமை நீதிபதி அருள் முருகன் மற்றும் இதர நீதிபதிகள், வழக்கறிஞர்கள் சங்க பிரதிநிதிகளும் கலந்து ஆலோசித்து ஒரு முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இன்று (நேற்று) முதல் 3 வார காலத்துக்கு நீதிமன்றம் பெயரளவுக்கு தான் செயல்படும். நிலுவையில் உள்ள கிரிமினல், சிவில் உள்ளிட்ட எந்த வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாது. அவசர ஜாமீன் மனுக்கள், அவசர கால தடை உத்தரவு வழக்குகள், சட்ட ரீதியான காலவரையறை கருதி தாக்கல் செய்ய வேண்டிய வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். இதில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள், வழக்காடிகள் மட்டும் அனுமதிக்கப்படுவர்.

மற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளவர்கள், சாட்சிகள் என யாரும் நீதிமன்றத்தில் ஆஜராக தேவையில்லை. வழக்குகளுக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து ஏதாவது பிடிவாரன்ட் பிறப்பிக்கப்படுமோ என அச்சமும் தேவையில்லை.  எனவே வீணாக நீதிமன்றத்துக்கு யாரும் வர வேண்டாம். இது போல வக்கீல் சங்க அலுவலகங்களும் அவசர தேவைக்கு மட்டுமே திறக்கப்படும். ஒரே இடத்தில் பலர் கூடுவதை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குமரி மாவட்ட அனைத்து நீதிமன்றங்களுக்கும் இது பொருந்தும். வரும் 9.04.2020 வரை வாய்தா தேதிகளும், விசாரணைகளும் மாற்றி அமைக்கப்படும்.  இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
நாகர்கோவில் வக்கீல் சங்க முன்னாள் தலைவர் வக்கீல் வெற்றிவேல், செயற்குழு உறுப்பினர் அப்பாச்சி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags : hearings ,Coronation Prevention Echo Kumari Courts ,
× RELATED சூதாட்டம் 3 பேர் சிக்கினர்