×

நோயாளிகள், பார்வையாளர்கள் வசதிக்காக குமரி அரசு மருத்துவக்கல்லூரியில் கழுவும் திரவம் தயாரிப்பு

நாகர்கோவில், மார்ச் 19: நோயாளிகள், பார்வையாளர்கள் கை கழுவி சுத்தம் செய்வதற்காக குமரி மருத்துவக்கல்லூரி மாணவர்கள் புதிய திரவத்தை தயாரித்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. கேரளாவில் இதன் பாதிப்பு அதிகமாக உள்ளதால் கேரளாவையொட்டி உள்ள தமிழக மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.பள்ளி, கல்லூரிகள், மால்கள், சினிமா தியேட்டர்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் வணிக நிறுவனங்களை வரும் 31ம்தேதி வரை மூட தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. குமரி மாவட்டடத்திலும் சுகாதாரத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே கைகளை கழுவுவதற்கான வசதிகள் செய்யப்பட்டு, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.ஆசாரிபள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 2 இடங்களில் கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதுவரை இந்த வார்டில் 8 பேர் வரை அனுமதிக்கப்பட்டு பரிசோதனை நடந்துள்ளது. இவர்கள் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. தொடர்ந்து  டீன் சுகந்தி ராஜகுமாரி தலைமையில் டாக்டர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

குறிப்பாக கடந்த 3 நாட்களாக, மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள், பார்வையாளர்கள் அனைவரும் கைகளை சுத்தமாக கழுவிய பின்னரே உள்ளே செல்ல வேண்டும் என உத்தரவிடப்பட்டு, இதற்காக  நுழைவு வாயில்கள் அருகே வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது கைகளை கழுவ வெளி மார்க்கெட்டில் இதற்கான சோப்பு மற்றும் திரவத்தை வாங்க வேண்டி இருக்கிறது. இதை தவிர்க்கும் வகையில், தற்போது மருத்துவக்கல்லூரி மருந்தியல்துறை சார்பில் புதிய திரவம் தயாரிக்கப்பட்டு உள்ளது. ஆல்கஹால், கிளிசரால் மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைடு போன்ற திரவங்கள் மூலம் இவை தயாரிக்கப்பட்டு உள்ளன.இந்த திரவத்தை கைகளில் ஊற்றி சோப்பு பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும். இது மிகப்பெரிய கிருமி நாசினி ஆகும். இந்த திரவத்தை மருத்துவக்கல்லூரி டீன் டாக்டர் சுகந்தி ராஜகுமாரி, நேற்று வெளியிட்டார். மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் அருள்பிரகாஷ், உறைவிட மருத்துவர்கள் டாக்டர்கள் ரெனிமோள், விஜயலெட்சுமி மற்றும் டாக்டர் அசோக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த திரவத்தை விற்பனைக்கு கிடையாது என்று டீன் சுகந்தி ராஜகுமாரி கூறினார். திரவத்தை கைகளில் ஊற்றி முகம், கண்களில் தடவி விட கூடாது என்றும் டாக்டர்கள் கூறினர்.

கொரோனா வார்டில் வாலிபர் அனுமதி
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று மதியம் சுமார் 28 வயது மதிக்கத்தக்க வாலிபர் அனுமதிக்கப்பட்டார். இவர் கோவில்பட்டியை சேர்ந்தவர் ஆவார். கத்தாரில் இருந்து திருவனந்தபுரம் விமானம் நிலையம் மூலம் வந்திறங்கிய அவருக்கு, திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பரிசோதனை நடந்தது. அப்போது மூச்சு திணறல் இருந்தது. இதையடுத்து அவரை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். பின்னர், ஆம்புலன்ஸ் மூலம், கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரது சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக நெல்லைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

Tags : Kumri ,Government Medical College ,visitors ,
× RELATED வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி...